பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இல்லாத ஆப்கானியர்களை கைது செய்ய உத்தரவு!
பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ள ஆப்கானியர்களை கைது செய்து நாடுகடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் ஆப்கானியர்களை ஜூலை 10 முதல் உடனடியாகக் கைது செய்யுமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைத் திருப்பி அனுப்பும் திட்டத்தைக் கடுமையாக செயல்படுத்துமாறு பாகிஸ்தானின் அனைத்து மாகாணாங்களிலுள்ள தலைமைச் செயலர்கள், ஆய்வாளர்கள், காவல்துறை மேலதிகாரிகள் ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 1 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து மாகாணங்களிலும் முறையான ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் தங்கியுள்ள ஆப்கானியர்களை நாடுகடத்தவும், திருப்பி அனுப்பவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ஜூலை 10, 2026 முதல் அமலுக்கு வருமென்றும், விசா இல்லாமல் பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவாகள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல, ஜூலை 11 முதல் கைது செய்யப்படுபவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நாள்தோறும் அறிக்கை தயார் செய்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ’இந்த விஷயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முழுமையாகப் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்’ என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆப்கனைச் சேர்ந்த அகதிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகின்றது. அங்கு ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தப்பி வந்தவர்களில் பல லட்சக்கணக்கானோர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தனர். 2021-ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், கூடுதலாக லட்சக்கணக்கில் மக்கள் பாகிஸ்தான் வந்தனர்.
2025-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 11,55,221 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாடுகடத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.