சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் – தடவிக்கொடுத்து உயிர் தப்பிய அதிசயம்
சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள் சிக்கிய நபர் அதன் தலையை தடவிக்கொடுத்து உயிர் தப்பியுள்ளார்.
சிங்கத்தின் பிடியில் 30 நிமிடங்கள்
குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.
சமீப காலமாக உணவு மற்றும் இடப்பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சிங்கங்கள் அடிக்கடி கிராமங்களுக்குள் வரும் சம்பவம் நிகழ்கிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா தாலுகாவில் உள்ள கராஜியா கிராமத்தில், கலுபாய் பர்மர் (Kalubhai Boghabhai Parmar) என்பவர் அங்குள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வழங்கிக்கொண்டிருந்தார்.
காலை 8;30 மணியளவில் அங்கு பதுங்கியிருந்த சிங்கம் ஒன்று அவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது.
அதில் சிங்கம் அவரின் கால்கள் மீது தனது கால்களையும், அவரின் ஒரு கையை தனது வாயிலும் வைத்து பிடித்திருந்தது.
அருகே கூடியிருந்த மக்கள் கூச்சலிடும் கற்களை வீசியும் சிங்கத்தை விரட்ட முயன்றனர். ஆனால் சுமார் 30 நிமிடங்கள் சிங்கம் அவரை தன் பிடியில் வைத்திருந்தது.
அதன் பின்னர் அவரை விடுவிடுத்து, மாட்டு தொழுவம் அருகே சென்றது. ஆனால் மாடுகளை ஒன்றும் செய்யாமல் அங்கிருந்து தப்பி சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனத்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டிருந்தாலும், சிங்கம் அங்கிருந்து கிளம்பிய பின்னரே அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
கலுபாய் பர்மர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தடவிக்கொடுத்து உயிர் தப்பினார்
இது குறித்து பேசிய அவர், “பசுவுக்கு உணவளிக்கச் சென்றபோது, அங்கே இருந்த சிங்கம்முதலில் அது என் தோளில் அடித்து என்னைக் கீழே தள்ளியது. பின்னர் என் கையை அதன் வாயில் கவ்வி சுமார் 30 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்தது.
பிறகு நான் அதைத் தடவிக் கொடுத்தேன்; அது என் கையை விட்டதும், நான் என் கையை எடுத்துக்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த மாதம் ஜூன் 16 அன்று, அம்ரேலி மாவட்டத்தில் 25 வயதான உணவக ஊழியர் சிங்கம் தாக்கியதில் உயிரிழந்தார்.
சில நாட்களுக்குப் பின்னர் கம்பா தாலுக்காவில் உள்ள சதுரி கிராமத்தில் தனது தாத்தாவுடன் நடந்து சென்றுகொண்டிருந்த 5 வயது சிறுவன் சிங்கம் தாக்கியதலில் உயிரிழந்தான்.