;
Athirady Tamil News

ஹார்முஸ் நீரிணையில் ஏவுகணை தாக்குதல் ; உலக எண்ணெய் வர்த்தகத்தில் அச்சம்

0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் தணிந்து, புரிந்துணர்வு அடிப்படையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் வகையில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கத்தார் மற்றும் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எண்ணெய் கப்பல்கள், ஓமன் கடற்கரைக்கு அண்மையில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் கப்பல்களில் தீப்பரவல் ஏற்பட்டதுடன், அவை சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹார்முஸ் நீரிணையிலிருந்து தெற்கே ஓமன் வளைகுடாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் நீரிணையில் தாம் நிர்ணயித்துள்ள கடற்பாதையிலேயே கப்பல்கள் பயணிக்க வேண்டும் என்றும், அந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் ஈரான் முன்னதாக அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்த விதிமுறைகளை மீறும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், அமெரிக்காவின் பாதுகாப்புடன் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதுடன், தமது கடல் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையில்,

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி வழங்கப்படும் என்றும், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பாதுகாப்பு மற்றும் கடல்சார் போக்குவரத்து தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.