;
Athirady Tamil News

ஈரானின் உட்கட்டமைப்புகளுக்கு பேராபத்து ; ட்ரம்பின் மிரள விடும் எச்சரிக்கை

0

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா தாக்கி அழிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைக்கவுள்ளதாக அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.

இரு தரப்பிலும் பரஸ்பரத் தாக்குதல்கள் தீவிரமடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல், ஹோர்முஸ் நீரிணையில் ஏவுகணை, ரொக்கெட், ட்ரோன் அல்லது வேறு ஏதேனும் சாதனம் அல்லது ஆயுதம் மூலம் கப்பல்கள் மீது ஈரானிய இஸ்லாமியக் குடியரசு தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு முறையும், அமெரிக்கா இந்த நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா நேற்று (22) ஈரானின் மீது மற்றொரு கட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

தலைநகர் தெஹ்ரானில் ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பதில் தாக்குதல்களை நடத்தின. அதேவேளை, இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஜோர்தானிய நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இராஜதந்திர முயற்சிகளில் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் தென்படாத நிலையில், ஈரானின் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக 11 ஆவது இரவாகவும் நீடித்துள்ளன.

ஈரானியத் தாக்குதல்கள் காரணமாக பெருமளவில் முடங்கியுள்ள, சர்வதேச எரிபொருள் விநியோகத்திற்கு முக்கியமான பாதையான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான மோதலில் இரு தரப்பு அதிகாரிகளும் தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.