;
Athirady Tamil News

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் (12.08.02026) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை
வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

கொந்தளிப்பான கடற்பரப்பு
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.