பிரிக்ஸ் வங்கியில் இணையும் ஈரான்!
பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் விரைவில் இணையவுள்ளதாக ஈரானின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் புதிய வளர்ச்சி வங்கியில் (நியூ டெவலப்மெண்ட் பேங்க்) ஈரான் இணையவுள்ளது என ஈரானிய மத்திய வங்கியின் ஆளுநர் அப்தொல்நாசர் ஹெம்மாட்டி புதன்கிழமை (ஆக. 12) அறிவித்துள்ளார்.
அமெரிக்கா உடனான போரில், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததாலும், தொடர்ந்து அந்நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாலும் இந்தப் புதிய முடிவை ஈரானிய அரசு மேற்கொள்வதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. மேலும், ஈரான் இணைவது குறித்து புதிய வளர்ச்சி வங்கியின் தரப்பிலிருந்தும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
முன்னதாக, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து உருவாக்கிய பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி, உள்கட்டமைப்பு மற்றும் நிலையான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்கி வருகிறது.
இத்துடன், பிரிக்ஸ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் இந்தியாவில் நடைபெறும் சூழலில், ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் ஈரான் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.