முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறை
ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதலாவது குற்றச்சாட்டுக்கு 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அத்துடன், இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் 7 வருட சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழல்
இந்த இரண்டு குற்றங்களுக்குமான தண்டனைகளை ஒரே தடவையில் அனுபவிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் ‘ஊழல்’ குற்றத்தை புரிந்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு மே தின பேரணியில் பங்கேற்ற தனது ஆதரவாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக பிரதிவாதி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் 320,000 ரூபாய் தொகையை விடுவித்த சம்பவம் தொடர்பிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.