இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை! – சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
தில்லி மற்றும் சீனாவின் குவான்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமானங்களை இயக்கவுள்ளதாக, சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவின் தெற்கு நகரமான குவான்சூவுக்கும் இந்தியத் தலைநகர் தில்லிக்கும் இடையே வரும் செப். 21 ஆம் தேதி முதல் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (செப். 12) அறிவித்துள்ளது.
தில்லியில் நடைபெறும் 18 ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் ஜின்பிங் இருவரும் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள நிலையில், சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா உடன் தனது சேவையை மீண்டும் தொடங்கும் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தில்லி மற்றும் குவான்சூ இடையே வாரத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தியா மற்றும் சீனா உறவுகளின் மேம்பாட்டைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் சீனா மற்றும் தில்லி இடையே ஏர் இந்தியா நிறுவனம் அதன் விமான சேவைகளைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.