;
Athirady Tamil News

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்ற “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை” பண்பாட்டுப் பெருவிழா!

0
வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை” எனும் தொனிப்பொருளிலான பண்பாட்டுப் பெருவிழா   (18.09.2026) வெள்ளிக்கிழமை யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான கவிதா உதயகுமார் தலைமை தாங்கினார்.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர்  தர்சினி நிதர்ஷன் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்  மாலினி கிருஸ்ணானந்தன், யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர்  கணேசமூர்த்தி சுலபாமதி, தொல்புரம் மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு. மாரிமுத்து சிதம்பரநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினர் உரை :
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன், அழிந்து வரும் கலைகளைப் பாதுகாத்து, எமது தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது அனைவரினதும் பொறுப்பு என தெரிவித்தார்.
சுழிபுரம் மேற்கு பெரிய புலோ
கிராமத்தில் ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா, கிராம மக்களின் முழுமையான பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டமை சிறப்பானதாகும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், ஒரு பிரதேச செயலகத்தின் நிகழ்வாக மட்டுமன்றி, கிராம மக்கள் தங்களுடைய சொந்த நிகழ்வாக இதனை முன்னெடுத்தமை பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார்.
மேலும், பெரிய புலோ முதல் விழா நடைபெற்ற இடம் வரையான பயணத்தின்போது வீதியின் இருமருங்கிலும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றமை, பண்பாட்டு விழா மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனவும குறிப்பிட்டார்.
“ஒரு பண்பாட்டு விழா மேடைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அது மக்களிடம் சென்று, கிராமங்களின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்த வேண்டும்” என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
பிரதேசத்தின் இயற்கை வளங்களான பனை, தென்னை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்ட மேடை அலங்காரங்கள், பாரம்பரிய இசைக்கருவிகள், ஊர்திகள், ஆடல் மற்றும் இசை நிகழ்வுகள் என விழாவின் ஒவ்வொரு அம்சமும் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தியதாக பாராட்டினார்.
மேலும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு வயதினரை ஒன்றிணைத்து விழா நடத்தப்பட்டமை அதன் முக்கியமான வெற்றியாகும் எனவும் தெரிவித்தார்.
விழாவில் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சங்கீதபூஷணம் அமரர் எஸ். கணபதிப்பிள்ளை நினைவுகூரப்பட்டமையும், பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர் அமரர் தர்சன் அவர்களின் சமூக மற்றும் கலை, கலாசாரப் பணிகள் பாராட்டப்பட்டு அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டமையும் பண்பாட்டு விழுமியங்களை மதிக்கும் சிறந்த செயற்பாடுகள் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
எமது முன்னோர்களிடமிருந்து கிடைத்த கலை, கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இதற்காக இத்தகைய பண்பாட்டு விழாக்கள் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை கலை, கலாசாரத்தின் ஊடாக ஒன்றிணைத்துள்ள இவ்விழா மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பான பண்பாட்டு விழாக்களில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
இந் நிகழ்வு சுழிபுரம் மேற்கு பெரிய புலோ கிராமத்திலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று, இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமானது. பெரியோர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து, யா/வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அரங்கம் தெய்வீகமாகியது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பேரவை கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செயற்குழு உறுப்பினர்  நாகராணி சீதரன் அவர்கள் அரங்குத் திறப்புரையை நிகழ்த்தினார்.
தொடர்ந்து யா/விக்ரோரியாக் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து செயற்குழு உறுப்பினர் திருமதி சிறிதேவி கண்ணதாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
அடுத்ததாக யா/வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களால் கிராமிய பாடல் பாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவை தலைவருமான திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவர்களின் ‘முரளீதர கௌரத்துவம்’ எனும் பரத நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்றதுடன், கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ‘கலை வாரிதி’ விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பதஞ்சலி கேத்திரா மாணவர்களின் ‘சண்முகார்ப்பணம்’ நாட்டிய நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இளம் கலைஞர் விருது’ வழங்கல் இடம்பெற்றது.
இதனையடுத்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதி அம்சமாக முத்தமிழ் கலை மன்ற கலைஞர்களால் ‘இனாவணேஸ்வரன் கூத்து’ மிகவும் சிறப்பாக ஆடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.
நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
தமிழ் கலாசாரம் – நம் அடையாளம் என்ற உணர்வை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்பண்பாட்டுப் பெருவிழா, தமிழர்களின் பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் மரபுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இந் நிகழ்வில் கலைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கலா ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.