;
Athirady Tamil News

ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் கைதடியில் புதிய தபால் நிலையம் திறந்து வைப்பு

0
யாழ்ப்பாணம், கைதடியில் ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று(19.09.2026) காலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி  நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த புதிய தபால் நிலையக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 02ஆம் திகதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான  இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களின் பங்கேற்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிலையில், 11 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு புதிய தபால் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைதடி பிரதேசத்தில் வசித்த அமரர் ஆறுமுகம் சூரியகுமார் தபால் நிலையம் அமைப்பதற்காக காணியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனைவி சூரியகுமார் தயாபரி மற்றும் பிள்ளைகளான சூரியகுமார் ரமணன், சூரியகுமார் மயூரன் ஆகியோரால் கடந்த வருடம் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

நிகழ்வில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடா வெட்டப்பட்டு தபால் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து தபால் நிலையத்தின் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அமரர் ஆறுமுகம் சூரியகுமாரின் சேவையை நினைவுகூரும் வகையில், தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தின் யாழ்ப்பாண உப அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத்தாள் நினைவுச் சின்னமாக அவரது மனைவி மற்றும் இளைய மகனிடம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்  எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிரதேச சபை கெளரவ தவிசாளர், தபால் திணைக்களத்தின் பிரதி தபால் மா அதிபர்களான துஷித ஹுலங்கமுவ மற்றும் ஹேமசந்திர ஹேரத், வடமாகாண பிரதி தபால் மா அதிபர் கே. நிவேதிகா, யாழ்ப்பாண பிராந்திய தபால் அத்தியட்சகர் கே. செந்தில் குமார், சாவகச்சேரி பிரதேச செயலாளர்  F. C. சத்தியசோதி,
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர்  எஸ் கபிலன்,  உள்ளிட்ட தபால் திணைக்கள அதிகாரிகள், கைதடி தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய தபால் நிலையத்தின் ஊடாக, கைதடி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு மேலும் மேம்படுத்தப்பட்ட தபால் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.