அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நற்பிட்டிமுனையில் கையெழுத்து சேகரிப்பு: திரண்ட தமிழ், முஸ்லிம் மக்கள்!(video)
video link-https://fromsmash.com/
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டுவரும் அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை உயிருடன் மீட்டு விடுவிக்க உரிய இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, நற்பிட்டிமுனை பகுதியில் இன்று (20) விசேட கையெழுத்து சேகரிப்பும் கவனயீர்ப்பு மன்றாட்டமும் முன்னெடுக்கப்பட்டன.
சமூக ஊடகப் பதிவொன்றைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டின் அடிப்படையில் இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. எனினும், இது தொடர்பான எழுத்துமூலமான உத்தியோகபூர்வ தீர்ப்பு இதுவரை இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெறவில்லை.
இப் பின்னணியில், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் அவசர உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரி இக் கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இன, மத வேறுபாடின்றி மக்கள் ஆதரவு
“ஒரு உயிரைக் காப்போம்; மனிதாபிமானத்துடன் கரம் கொடுப்போம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து நற்பிட்டிமுனை மக்கள் உட்படப் பெருந்திரளான தமிழ், முஸ்லிம் பொதுமக்கள் ஒன்றிணைந்து கையெழுத்திட்டனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தி அனோஜனின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
அத்துடன், அனோஜனின் விடுதலைக்காக நாடளாவிய ரீதியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இலங்கையராக ஒன்றிணைந்து பல்வேறு மனிதாபிமான முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
