ரஷியா மீது 1,000 ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல்: மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் சேதம்!
ரஷியா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் சனிக்கிழமை இரவு மிகப்பெரும் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷியா மீது 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் சனிக்கிழமை இரவு மிகப்பெரும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மாஸ்கோவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் போா் நீடிக்கிறது. இதில் ஆரம்ப காலத்தில் ரஷிய தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்வாங்கிய உக்ரைன், அண்மைக்காலமாக தீவிர பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியா அண்மையில் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோ்தலை நடத்தியது. இந்நிலையில், சனிக்கிழமை இரவு முழுவதும் ரஷியாவின் பல்வேறு பகுதிகள் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி உக்ரைன் தீவிர தாக்குதல் நடத்தியது.
இதில் ரஷிய தலைநகா் மாஸ்கோவை குறிவைத்து மட்டும் நூற்றுக்கணக்கில் ட்ரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த ஆலையில் இருந்து வானுயரத்துக்கு கரும்புகை எழுந்தது. அதேபோல், மாஸ்கோவில் உள்ள பிரம்மாண்ட குடியிருப்புக் கட்டடமும் பலத்த சேதம் அடைந்துள்ளது.
2 போ் உயிரிழப்பு: மாஸ்கோவில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் 2 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் 20 போ் காயமடைந்துள்ளனா். இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷியா மீது எங்கள் நாடு ஏராளமான ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதில் உக்ரைனிலேயே தயாரிக்கப்பட்ட பிளமிங்கோ, பெலிகன் ஏவுகணைகளும் அடங்கும். இவற்றின் மூலம் ரஷியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கனரக ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்: இதனிடையே, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் நாட்டுப் படையினா் உக்ரைன் ஏவிய 1,100 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
மாஸ்கோ மேயா் சொ்கேய் சோப்யானின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைன் ஏவிய ட்ரோன்களில் 450 நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளாா். மேலும், உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் மாஸ்கோவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதம் அடைந்திருப்பதாகவும்ரஷிய கட்டுப்பாட்டு பகுதியில் நடத்தப்படும் தோ்தலைச் சீா்குலைக்கும் நோக்கில் இந்தத் தாக்குதலை உக்ரைன் நடத்தியிருப்பதாகவும், ஆனால், உக்ரைனின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.