ஒரு போட்டோகொப்பி பிரதிக்கு 850 ரூபாய் ; அதிரடி காட்டிய அதிகாரிகள் ; காத்திருக்கும் சட்ட நடவடிக்கை
ஒரு பிரதியை எடுப்பதற்கு 850 ரூபாய் கட்டணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டத்தில் உள்ள வியாபார நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனையிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்தச் சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கை
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கூற்றுப்படி, இந்த ஆய்வின்போது நுகர்வோர் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான சான்றுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அடுத்த சில நாட்களில் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அந்த வியாபார நிலையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தை விசாரணைகள் மற்றும் சோதனைகளை வழக்கமாக நடத்தி வரும் நுகர்வோர் விவகார அதிகாரசபை, சட்ட விதிகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து வருகிறது.
நியாயமற்ற விலை நிர்ணயம் மற்றும் பிற சந்தை அநீதிகள் குறித்து 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர அழைப்பு இலக்கம் மூலம் முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.