அநுர இனவாத அரசின் முகமூடி கிழித்தெறியப்பட்டது! தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுகூடி செய்யவேண்டியதை செய்வார்கள்!!
தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து நாடகங்களும் இன்று உலகம் போற்றும் அகிம்சாவாதி தியாகதீபம் திலீபன் அண்ணாவின் நினைவுச்சிலையை பலாத்காரமாக அகற்றியதால் முடிவுக்கு வந்துள்ளதாக தமிழ்த்தேசிய பேரவையின் பிரமுகரும், ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதி செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச மற்றும் ரணிவ் விக்கிரமசிங்க ஜனாதிபதிகளாக செயற்பட்ட காலப்பகுதியில் குறித்த நினைவுத்தூபியை மறு சீரமைக்கும் பணிகளில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டாளர்களோடும் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களோடும் இணைந்து நான் இரவு பகலாக குறிப்பாக இரவு இரண்டு மணி தாண்டியும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் அப்போது இவ்வாறான கடுமையான அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொண்டிருக்கவில்லை.
1994 ல் சமாதானப் புறா போன்று வேடம் தரித்துவந்த சந்திரிகா பண்டாரநாயக்க அம்மையாரைப் போன்றே இம்முறை அநுரகுமாரவும் போலி வேடம் பூண்டு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் எத்தனை இடையூறுகள், அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒன்றுகூடி செய்ய வேண்டிய நேரத்தில் செய்யவேண்டியதை செய்வர் என்றும் ஆணித்தரமாக நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
