;
Athirady Tamil News

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் ; ‘நோர் ஈஸ்டர்’ புயலால் வெள்ளப்பெருக்கு

0

அமெரிக்காவின் வடகிழக்குக் கடலோரப் பகுதிகளை சக்திவாய்ந்த ‘நோர் ஈஸ்டர்’ புயல் தாக்கி வரும் நிலையில், நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பினால் நியூ ஜெர்சி முதல் மசாசூசெட்ஸ் வரையிலான கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புயலின் தாக்கம் திங்கட்கிழமை வரை நீடிக்கக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது. நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி ஆளுநர்கள், புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளனர். நியூயோர்க் நகரமும் இந்த நடவடிக்கைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புயலினால் மரங்கள், கிளைகள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததில் ஒரு கட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மின்சாரத்தை இழந்தன.

சனிக்கிழமை நிலவரப்படி, நியூ ஜெர்சி, கனெக்டிகட், நியூயோர்க் மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் 88,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புயல் காரணமாக அமெரிக்க விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 425 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டதுடன், 1,338க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமடைந்ததாக ஃப்ளைட்அவேர் தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதிகளில் பலத்த அலைகள் மற்றும் கடல் நீர் உட்புகுதல் காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சில இடங்களில் நீர்மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக வெள்ளநீர் தேங்கியுள்ள வீதிகளில் வாகனங்களைச் செலுத்துவதையோ நடந்து செல்வதையோ தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பல முக்கிய கலை நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. நியூயோர்க்கின் சென்ட்ரல் பார்க்கில் லாரன் ஹில், வைக்கிளெஃப் ஜீன் மற்றும் ஜான் லெஜெண்ட் உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்த Global Citizen இசை விழாவும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, போஸ்டனில் எட் ஷீரன் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகளும் கடுமையான வானிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

புயலின் தாக்கம் தொடர்ந்து காணப்படக்கூடும் என்பதால், தாழ்நில மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.