;
Athirady Tamil News

உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை; ஜெலன்ஸ்கியை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

0

வாஷிங்டன்:

உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவைப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். ரஷியாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் முடியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது: ஒப்பந்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய புதிய தலைவர் உக்ரைனுக்கு தேவை என்று நான் பரிந்துரைக்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் ஜெலன்ஸ்கி ஒருபோதும் அதைச் செய்வதில்லை.

ரஷியா-உக்ரைன் இடையிலான போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் போர் தொடங்கியிருக்கவே கூடாது என்றும், 2022-ம் ஆண்டில் தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் ஏற்பட்டிருக்காது. போர் காரணமாக உக்ரைன் தனது நிலப்பரப்பில் 30 சதவீதத்தை இழந்துவிட்டது இரு தரப்பிலும் சேர்த்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போர் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.

ஜெலன்ஸ்கி விமர்சனம்

ரஷியா டீசல் ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஜெலன்ஸ்கி விமர்சித்திருந்தார். உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, கூட்டாளிகளிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நடவடிக்கை அல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார். டிரம்ப் முடிவை ஜெலன்ஸ்கி விமர்சித்து இருந்த நிலையில், உக்ரைனுக்கு புதிய அதிபர் தேவை என்று டிரம்ப் தெரிவித்திருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.