;
Athirady Tamil News

மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம்

0

மனைவியுடனான சண்டை தவிர்க்க முயற்சித்து பால்கனியில் இருந்து விழுந்து கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 வது மாடியில் இருந்து விழுந்த கணவர்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சென்சுரியன் பார்க் டிராபிகல் கார்டன் சொசைட்டியின்(Centurion Park Tropical Garden Society) அடுக்குமாடி குடியிருப்பின் 21 வது மாடியில் இருந்து தவறி விழுந்து 31 வயது கணவர் உயிரிழந்துள்ளார்.

மனைவியுடனான வாக்குவாதத்தை தவிர்க்க முயற்சி செய்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு 31 வயதான ஹர்ஷித் லவானியாவுக்கு(Harshit Lavania) திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

ஹர்ஷித் மனைவியிடம் இருந்து பிரிந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஷர்ஷித்தின் மனைவி அவரது வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார்.

ஆனால் மனைவி உடன் மீண்டும் ஒரு வாக்குவாதம் ஏற்படுவதை விரும்பாத கணவன் ஹர்ஷித், கதவை திறக்க மறுத்ததுடன் மட்டும் இல்லாமல் தான் வசித்து வந்த 21 வது மாடியின் பால்கனியில் இருந்து கீழ் மாடிக்கு இறங்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு புகாரும் இதுவரை அளிக்கப்படவில்லை என்று பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் அவரது மனைவியிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.