;
Athirady Tamil News

இந்திய துணைத் தூதரக அதிகாரியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் சந்திப்பு

0

இந்திய துணைத் தூதரக அதிகாரியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் சந்திப்பு –

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் தூதரக அதிகாரி திரு. சாய் முரளி அவர்களை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் உறுப்பினருமான நா. இரட்ணலிங்கம் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

சம்பிரதாயபூர்வமான சந்திப்பாக இருந்தபோதிலும் தமிழ் மக்கள் சார்ந்த அடிப்படையான, அவசியமான பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடாத்த கோரி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான செயற்பாடுகள் பற்றி துணைத்தூதரக அதிகாரிக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அதிகாரிகளினால் நிர்வாகம் நடாத்தப்படுவதால் ஏற்பட்டுள்ள பாதகமான விடயங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.

குடிசனத் தொகையில் தமிழ் மக்களின் எண்ணிக்கையில் ஏற்படுகின்ற சரிவினால் ஜனநாயக அரசியலில் ஏற்படப்போகும் நீண்டகால இழப்புகளை சுட்டிக்காட்டியிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் புலம்பெயராமல் இருப்பதற்கு அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இந்திய மத்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறைத் துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றின் விரிவாக்கத்திற்கான துரித அபிவிருத்தி குறித்தும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அமைந்துள்ள புராதன சைவ சமய வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல சமயத் தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன் இவ் விடயத்தில் தேவைப்படுகின்ற இந்திய மத்திய அரசின் விசேட கரிசனை குறித்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

மேற்படி சந்திப்பில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் திரு. பா. கஜதீபன் மற்றும் சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் திரு. ஞா. கிசோர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.