;
Athirady Tamil News

யாழ். நவீன சந்தையை நவீன வணிக வளாகமாக மாற்ற திட்டம்: முதலீட்டாளர் பங்களிப்பைப் பெற ஆளுநர் யோசனை

0
 
யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியைத் தொடர்ந்தும் அதே நிலையில் பராமரிப்பதற்குப் பதிலாக, நகரின் எதிர்காலத் தேவைகளையும் வணிகத் தேவைகளையும் கருத்திற்கொண்டு நவீன வணிக வளாகம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் குறைபாடுகள், நகரத் தூய்மை, அனுமதியற்ற கட்டுமானங்கள், பேருந்து நிலைய முகாமைத்துவம் உள்ளிட்ட நகர அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம்  திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

1970ஆம் ஆண்டுகளில் தூய்மையான நகரமாக விளங்கிய யாழ்ப்பாணம் இன்று அந்த அடையாளத்தை இழந்துள்ளது

யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாகத் தாம் நவீன சந்தையை நேரில் பார்வையிட்டபோது, அதன் பராமரிப்பு நிலை நகரின் அழகையே பாதிக்கும் வகையில் இருப்பதை அவதானித்தோம்

 பல ஆண்டுகளாக வர்ணம் பூசப்படாமை, மலசலகூடங்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமை, நுழைவாயில் கதவுகள் இல்லாமை, மலசலகூடக் கசிவுகள் கடைகளுக்குள் செல்வது, பயன்படுத்தப்படாத பகுதியில் மழைநீர் தேங்கி கீழ்த் தளத்துக்குக் கசிவது உள்ளிட்ட பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

 இத்தகைய சூழலில் வணிக நடவடிக்கைகள் எவ்வாறு சிறப்பாக நடைபெற முடியும்?, சந்தையில் அவதானிக்கப்பட்ட அனைத்துக் குறைபாடுகளையும் காலக்கெடுவுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும்

எனவே நவீன சந்தைக் கட்டடத் தொகுதியைத் தொடர்ந்தும் அதே நிலையில் பராமரிப்பதற்குப் பதிலாக, நகரின் எதிர்காலத் தேவைகளையும் வணிகத் தேவைகளையும் கருத்திற்கொண்டு நவீன வணிக வளாகம் ஒன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்

இதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருடன் ஆலோசித்து, அரச–தனியார் கூட்டாண்மை மற்றும் முதலீட்டாளர் பங்களிப்பு உள்ளிட்ட வழிமுறைகளையும் பரிசீலிக்கலாம்

இந்த முன்மொழிவு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் தேவையான ஆலோசனைகளையும் திட்டமிடல் மதிப்பீடுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார் .

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.