;
Athirady Tamil News

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

0

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள், சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்ற நோய்களே, வெரிகோஸ் என்று அழைக்கப்படுகிறது.

வெரிகோஸ் வெயின் எதனால் வருகிறது ?

மனிதனின் பெருங்குடல், விலங்குகளுக்கு இருப்பதைப் போல் கீழ்நோக்கித் தொங்கிய படி இல்லை. ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போல மனிதனின் பெருங்குடல் அடைக்கப்பட்டுள்ளது. மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படுகின்றன. நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன. ஆக, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாகக் கருதப்படுகிறது. அடுத்தபடியாக, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்கவிட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும், இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இந்நோய் ஏற்படுகிறது.

இரத்த நாளங்களிலுள்ள வால்வுகள் பலவீனமாக இருந்தால் இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பாதங்களிலிருந்து இரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் போது, புவியீர்ப்பு விசைக்கு எதிராக, அதிகவிசையுடன் வால்வுகள் இயங்க வேண்டி உள்ளது. அது இயலாமல்போகும் போது, இரத்தம் மீண்டும் கீழ்நோக்கியே செல்லத் தொடங்கும். இதனால், இரத்த நாளங்களின் சுவர்கள் பாதிக்கப்பட்டு, புடைத்தும் வீங்கியும் காணப்படும். ஆக, இவை எல்லாமே, உடலுக்கு அதிக அசைவில்லாத வாழ்க்கை முறையால் வரும்கேடுகள் என்பது புரிகிறது.

வெரிகோஸ் யாருக்கு ஏற்படுகிறது?

அதிக எடை, மலச்சிக்கல், கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசைவற்றிருத்தல் போன்ற காரணங்களால், பெண்களுக்கு வரவாய்ப்பு அதிகம். பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் இரு பாலருக்கும் வரும். வயது முதிர்ந்தவர்களுக்கு, இரத்த ஓட்டப் பாதிப்பால் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு, கால் பகுதிகளில் உள்ள இரத்த நாளங்களில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பெரும்பாலான தாய்மார்களுக்கு மூன்று மாதங்கள் முதல் 12 மாதங்களுக்குள் இந்நோய் ஏற்படுகிறது.
அதிக எடை உள்ளவர்கள் மற்றும் கொழுப்பு உள்ளவர்களுக்கும் இந்த நோய் எளிதில் வரும். பொதுவாகப் பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைச் சிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்வது, அசைவற்று ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு, வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்

தோலின் உட்புறத்தில் இரத்த நாளங்கள் நீண்டு தடித்திருப்பதைக் காண முடியும். கணுக்காலிலும், பாதங்களிலும் இலேசான வீக்கம் காணப்படுதல். பாதங்கள் கனத்தும் வலியுடன் காணப்படுதல். பாதப்பகுதிகளில், சுளுக்கு மற்றும் சுண்டி இழுத்தல். கணுக்காலிலும், பாதங்களிலும் அரிப்பெடுத்தல்

வருமுன் தடுப்பதற்கான வாய்ப்புகள்

இந்த நோய் வரும் முன் மட்டுமே தடுக்க முடியும். வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. மேலும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்க்க வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது. தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

தளர்ந்த ஆடைகளையே அணிய வேண்டும். எடை அதிகம் உள்ளவர்கள், கட்டாயம் அதனைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். எடை அதிகம் உள்ள பெண்கள், குதிக்கால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வாழ்க்கை முறையை மாற்றச் செய்வதில் இருந்துதான் இந்த நோய்க்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

இதன்மூலம் வெரிகோஸ் வெயின் புதிதாக உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கெனவே இருப்பவற்றால் வரும் வலி மற்றும் வேதனைகளைக் குறைக்க முடியும். அறுவைச் சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறைகள் மூலம் அகற்றுவதாலோ முழுமையாகப் பயன் கிடைக்காது. ஏனென்றால், மற்றோர் இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர், அதனை அகற்றுவது கடினம் என்பதையும் வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதுமே முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.