;
Athirady Tamil News

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!

0

ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் சார்பில் காந்தி ஜெயந்தி, அம்பேத்கர் நூற்றாண்டு விழா மற்றும் விஜய தசமி ஆகியவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது இதற்கு அனுமதி கேட்ட மனுவை போலீசார் பரிசீலிக்காததால், ஐகோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வழக்கு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிபந்தனை அடிப்படையில் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட்டது. ஆனால், தற்போதைய சட்ட ஒழுங்கை காரணம் காட்டி, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு திருவள்ளூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமதி வழங்க மறுத்தார்.

அவமதிப்பு வழக்கு
இதையடுத்து டி.ஜி.பி., திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட்டில் திருவள்ளூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கார்த்திகேயன் தாக்கல் செய்தார். இந்த வழக்கு எல்லாம் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன், வக்கீல் ரபுமனோகர் ஆகியோர் ஆஜராகி, ”அமைதியான முறையில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கவும், இதற்காக நிபந்தனைகளை விதித்தும் ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தது கோர்ட்டு அவமதிப்பு செயலாகும். ஐகோர்ட்டு உத்தரவுகளை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்றார்.

தமிழ்நாட்டில் மட்டும்…
அதேபோல ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா ஆகியோர், “மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் நடத்தப்படும் இந்த ஊர்வலத்துக்கு தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பாகவே இந்த ஊர்வலத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பம் செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது போலீசாரின் கடமை. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்துள்ளதால் கடுமையான போராட்டம் நடைபெறும் என்று போலீஸ் தரப்பில் கூறினாலும், கேரளா மற்றும் புதுச்சேரியிலும் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ” என்று வாதிட்டனர்.

அமைச்சர்கள் கூட்டம் ரத்து
போலீசார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆகியோர், “தேசிய புலனாய்வு முகமையின் சோதனை, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு போன்ற சம்பவங்கள் அண்மையில் நடந்துள்ளன. எனவே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 52 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டே ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பும் ஊர்வலமோ, பேரணியோ நடத்தக்கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் நலனுக்கே உச்சபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். காந்தி ஜெயந்தியை கொண்டாடக்கூடாது என போலீசார் அனுமதி மறுப்பதாக ஆர்.எஸ்.எஸ்., தரப்பில் தவறாக உருவகப்படுத்தப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) அமைச்சர் பங்கேற்கக்கூடிய உள்ளரங்கு கூட்டத்துக்கே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது ஊர்வலத்துக்கு எப்படி அனுமதிக்க முடியும்? மாற்று தேதிகளில் ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று வாதிட்டனர்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதையடுத்து மனுதாரர்கள் தரப்பில் ஊர்வலத்துக்கு 3 தேதிகளை கூறினர். இதை பரிசீலித்த நீதிபதி, காந்திஜெயந்தி தினத்தன்று இந்த ஊர்வலத்தை நடத்துவதற்குப் பதிலாக நவம்பர் 6-ந்தேதி ஊர்வலம் நடத்தலாம். அதற்கு வருகிற 31-ந்தேதிக்குள் போலீசார் அனுமதி வழங்க வேண்டும். அப்படி வழங்காவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.