;
Athirady Tamil News

45% பௌத்த பிக்குகள் துறவறத்தை துறக்கின்றனர் !!

0

பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவதாகவும், பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் கூடிய பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருசில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில்
கலந்துரையாடப்பட்டுள்ளது. பௌத்தத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு என்பதால், இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். இதன்படி அடுத்த கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்படுவதுடன், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். குழுவின் உறுப்பினர்களான சுஜித் சஞ்சய் பெரேரா, குணதிலக ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.