;
Athirady Tamil News

உளவு பலூன் அல்ல: அமெரிக்க வான்பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்- சீனா விளக்கம்!!

0

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு விவகார அமைச்சகம் கூறியதாவது:- அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல். அது ராணுவ பயன்பாட்டுக்கானதல்ல. பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதாகும். மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்பு கொண்டு விளக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வான் பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்தான் என்று சீனா அளித்துள்ள விளக்கத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஏற்க மறுத்து விட்டது. இதுகுறித்து பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் டைரடர் கூறும்போது, “சீன அரசின் விளக்கம் பற்றி அறிந்தோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி சீன அரசிடம் தூதரக ரீதியிலும் மற்றும் பல்வேறு மட்டங்களிலும் நேரடியாகவே தெரிவித்து விட்டோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.