;
Athirady Tamil News

கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் கர்நாடகாவில் சாதித்து காட்டிய காங்கிரஸ்!!

0

கர்நாடகத்தில் காங்கிரசின் வெற்றி பெரு விரலை உயர்த்தி கர்வப்பட வைத்துள்ளது. அதேநேரத்தில் பா.ஜனதாவுக்கு பாடத்தையும் கற்றுக்கொடுத்துள்ளது. 137 ஆண்டுகள் பழமையான பாரம்பரிய கட்சி என்று மார்தட்டினாலும் 2014 மற்றும் 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்தது. மோடி என்ற மிகப்பெரிய ஜாம்பவானின் முன்பு கையின் ஜம்பம் பலிக்காமல் போனது என்பதே உண்மை. இனி காங்கிரஸ் கரை சேருமா? என்ற எண்ணம் சொந்த கட்சியினரிடமே ஏற்பட்டிருந்த நிலையில் 2018-ல் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ‘கை’ ஓங்கியிருக்கும் நிலையில் காங்கிரசுக்கு புது நம்பிக்கை கொடுத்துள்ளது. காங்கிரஸ், உள்ளூர் அரசியலை கையில் எடுத்து லாவகமாக அரசியல் செய்தது. 1980-ல் பா.ஜனதா தொடங்கப்பட்டதில் இருந்து இப்போதுதான் இவ்வளவு பெரிய ஊழல் புகாரில் சிக்கியது.

காங்கிரஸ் அதை கையில் எடுத்தது. 40 சதவீத கமிஷன் அரசு என்ற கோஷம் சாதாரண மக்கள் வரை சென்றடைந்தது. அதை உடைக்க மோடி என்ற பிம்பத்தை மட்டுமே பா.ஜனதா நம்பியது. ஆனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதை நிராகரித்துவிட்டார்கள். பா.ஜனதாவில் உள்ளூர் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். ஆனால் காங்கிரஸ் உள்ளூர் தலைவர்களையே நம்பியது. முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரும் தங்களுக்குள் இருக்கும் கவுரவ பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாக பணியாற்றியதும் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சமூக ரீதியான பிரச்சினைகள் காங்கிரசுக்கு கை கொடுத்திருக்கிறது. மாண்டியா, ஹசன் பகுதியில் உள்ள ஒக்கலிகர் சமூகம் காங்கிரசுக்கு பெருமளவில் ஆதரவு அளித்துள்ளது. லிங்காயத்து சமூக ஆதரவு எதிர்பார்த்த அளவு பா.ஜனதாவுக்கு கிடைக்காமல் போனது.

லிங்காயத்து சமூகத்தின் முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகிவிட்டார். அதேபோல் பா.ஜனதாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சவடி ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும் லிங்காயத்து சமூக வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்க உதவி புரிந்தது. வழக்கமாக மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிக்கும் இஸ்லாமியர்கள் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பி இருக்கிறார்கள். காங்கிரசின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளான பஸ்களில் பெண்கள் இலவச பயணம், மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1500 என்ற அறிவிப்புகள் மக்களை வெகுவாக கவர்ந்ததும் ஒரு காரணம். கர்நாடக தேர்தல் வெற்றி என்பது அந்த கட்சிக்கு சில மலரும் நினைவுகளையும் கண்முன் கொண்டு வந்துள்ளது.

1969-ல் பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டத்தில் சிண்டிகேட் மூலம் இந்திரா காந்தி வெளியேற்றப்பட்டார் அப்போது காங்கிரசின் சின்னம் பசுவும் கன்றும். கட்சி பிளவுபட்டதை அடுத்து இந்திரா கை சின்னத்தை சிக்மகளூருவில் அறிமுகப்படுத்தினார். அதாவது 1978-ல் அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்திரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 1980 பாராளுமன்ற தேர்தலில் கை சின்னத்தில் நாடு முழுவதும் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மீண்டும் ஆட்சியை பிடித்தது.

அதேபோல் 1999 பாராளுமன்ற தேர்தலில் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்தார். கடந்த கால இந்த வரலாற்று நிகழ்வுகளை சிக்மங்களூரில் நடந்த பிரசாரத்தின் போது பிரியங்கா காந்தி குறிப்பிட்டு பேசினார். பாட்டிக்கு மறுவாழ்வு கொடுத்த மாநிலம் கர்நாடகா. அதே போல் மீண்டும் காங்கிரசுக்கு கை கொடுங்கள் என்று உருக்கமாக பேசினார். இதுவும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. சிக்மங்களூரில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையும், காங்கிரசின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் காங்கிரசை கைதூக்கி விட்டுள்ளது. அதேநேரம் பா.ஜனதாவின் வாக்கு 36 சதவீதத்தில் இருந்து அதிகரிக்கவில்லை.

ஆனால் காங்கிரசுக்கு 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 1985 முதல் 38 ஆண்டுகளாக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் வரலாறு. கடைசியாக 1999 தேர்தலில் 132 தொகுதிகளை பெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அப்போது எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தார். அதன்பிறகு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் தனி மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.