;
Athirady Tamil News

ஒலிம்பிக், உலகக்கோப்பை நேரத்தில் ‘மாதவிடாய்’ வந்தால் வீராங்கனைகள் என்ன செய்வார்கள்?!!

0

“வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய பிறகு, நான் கீழே வந்து கொண்டிருந்தேன். எனக்கு அந்த நேரத்தில் மாதவிடாய் தொடங்கிய போது நான் 8,000 மீட்டர் உயரத்தில் இருந்தேன்.

எட்டாயிரம் மீட்டர் உயரத்தில் ஐந்து சிகரங்களை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் மலையேறும் வீராங்கனை பிரியங்கா மோஹிதே, தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.

“நான் மிகவும் களைப்படைந்திருந்தேன். ஆக்ஸிஜன் சிலிண்டருடன் சுமார் 12 மணி நேரம் மலை ஏறினேன். எனக்கு மாதவிடாய் 10 நாட்களுக்குப் பிறகு வரவிருந்தது. ஆனால் சோர்வு அல்லது மோசமான வானிலை காரணமாக இது முன்னதாகவே தொடங்கியிருக்கலாம். ஆனால் நான் அதை எதிர்பார்த்து, அதற்குத் தயாராக இல்லை. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் டிஷ்யூ பேப்பரை பேடாகப் பயன்படுத்தினேன்.”

ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீராங்கனைகளின் மாதவிடாய் அனுபவங்களைத் தெரிந்துகொள்ள முயன்றோம். இதற்கு முன்பாகத் தான் நியூசிலாந்து கால்பந்து அணி தனது வீராங்கனைகளின் ஆடைகளை மாற்றியிருந்தது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வெள்ளை ஆடைகளுக்குப் பதிலாக அந்த அணியினருக்கு அவர் நீல நிற ஆடைகள் பரிந்துரைக்கப்பட்டன.

அதே காரணத்திற்காக, விம்பிள்டனில் பெண் டென்னிஸ் வீராங்கனைகள் தங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் உள்ளாடைகளை அணியலாம் என விதிகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டன.

வீராங்கனைகள் மாதவிடாய் காலங்களில் விளையாடுவது புதிதல்ல என்றாலும், சிலர் அதே காலங்களில் பெரிய வெற்றிகளையும் பெற்றுள்ளனர்.

பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்- 2020 இல் வெள்ளிப் பதக்கத்தை வென்றார், அவர் மாதவிடாய் காலத்தில் இருந்தபோது, ​​சிறந்த செயல்திறனுக்காக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எப்படித் தயார் செய்தார் என்பதை பின்னர் கூறினார்.

வீராங்கனைகளுக்கு மாதவிடாய் என்பது பெரிய சவாலாக உள்ளது, இருப்பினும் இதைப் பற்றி பலர் பேசுவதில்லை.

மற்ற பெண்களைப் போலவே, ஒரு பெண் விளையாட்டு வீராங்கனையின் உடலும் பல்வேறு மாற்றங்களைக் கடந்து செல்கிறது.

இந்த மாற்றங்களை அவர் எப்படி சரிசெய்கிறார் என்பதை புரிந்து கொள்ள முயற்சித்தோம்.

விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சியின் போது அல்லது விளையாடும் போது மாதவிடாய் ஏற்பட்டால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

மாதவிடாய் காலங்களில் பெண் விளையாட்டு வீராங்கனைகளின் மனநிலை மாற்றங்கள், வயிற்று வலி, முதுகு வலி, கால் வலி, குமட்டல், சோர்வு போன்ற உபாதைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மற்ற பெண்கள் எப்போதாவது இதற்கெல்லாம் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் விளையாட்டில் கடுமையான விதிகள் இருப்பதால், விளையாட்டு வீராங்கனைகள் தாங்களாகவே எந்த மாத்திரைகளையும் எடுக்க முடியாது. அவர்கள் மாதவிடாய் காலங்களிலும் பயிற்சி பெற வேண்டும் என்பது மட்டுமல்ல, சிறப்பாக செயல்படுவதையும் உறுதி செய்யவேண்டும். மேலும், அப்போது காயங்கள் ஏற்பட்டால் அவற்றையும் எதிர்கொள்ளவேண்டும்.

ஸ்வீடனில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த சிசிலியா ஃப்ரீடன் இது குறித்து ஆய்வு செய்துள்ளார் .

மாதவிடாய்க்கு முன் மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் காயங்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கருமுட்டை விடுவிக்கப்படும் முதல் கட்டத்தில் இருக்கும் போது (14 வது நாள்) பெண்களுக்கு முழங்கால் காயம், சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் 21 முதல் 28 வது நாள் வரை அதிகமாக இருக்கும்.

2016 இல் நடந்த மற்றொரு ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட சிறந்த வீராங்கனைகளும் ஹார்மோன் மாற்றங்களை எதிர்கொள்கின்றனர் என்றும், இது அவர்களின் பயிற்சி மற்றும் செயல்திறனை பாதிக்கிறது என்றும் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வை நடத்திய டாக்டர் ஜார்ஜி புருயின்வெல்ஸ், ஒரு தடகள வீராங்கனையாக இருந்துள்ளார்.

அவர் கூறுகிறார், “கருமுட்டை விடுவிக்கப்படும் போது அல்லது அதற்கு முன் ஒரு பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில், பெரும்பாலான பெண்கள் விளையாட்டில் மிகவும் திறமையானவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த அளவு கருமுட்டை விடுப்பிற்கு முன் குறைவாகவே இருக்கும்.”

“அதே நேரம் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன் பிந்தைய கட்டங்களில் அதிகமாகச் சுரக்கும். இது உடல் வெப்பநிலை, சுவாசம், இதயத் துடிப்பு ஆகியவற்றை அதிகரிக்கும். இதனால் வளர்சிதை மாற்ற விகிதம் பாதிப்படைகிறது. அதனால்தான் உணவை மாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது,” என்கிறார் அவர்.

இந்த ஹார்மோன் மாற்றங்களைப் பற்றி வீராங்கனைகள் முழுமையாக அறிந்திருந்தா, அது அவர்களின் பயிற்சி நேரத்தை ஒழுங்கமைக்க உதவியாக இருக்கும்.

மாதவிடாயை எதிர்கொள்ள உதவும் வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு பயிற்சி மேற்கொள்வது அல்லது விளையாடுவது வீராங்கனைகளின் சிரமங்களைக் குறைக்க உதவும் என பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை கால் பந்து போட்டியின் முதல் கோலை அடித்த நியூசிலாந்து கால்பந்து வீராங்கனை ஹன்னா வில்கின்சன் கூறும்போது, ​​“பெரிய போட்டி என்றால், மாதவிடாய் வரவில்லை என்று வீராங்கனைகள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள். ஆனால் அது எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை,” என்றார்.

மாதவிடாய் காலத்தில் கூட சிறப்பாக விளையாட மனதளவிலும், உடலளவிலும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

பிரியங்கா மோஹிதே பேசிய போது, “எனது மாதவிடாய் காலத்திலும் நான் பயிற்சி செய்கிறேன். நான் குறைந்தபட்சம் நடைபயிற்சி, டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வது, யோகா, கை-கால்களை நீட்டி மடக்குவது போன்றவற்றை வழக்கமாகச் செய்கிறேன். நான் மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சியின் அளவைக் குறைத்துக்கொள்வேன் என்ற போதிலும் ஆனால் உடற்பயிற்சி செய்வதை நிறுத்த மாட்டேன்,” என்றார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக்ஸ் கற்பித்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பயிற்சியாளர் ஹரிஷ் பராப் பேசிய போது, “எனது மாணவர்கள் தங்களுக்கு மாதவிடாய் வருகிறது அல்லது அதற்கான நாள் நெருங்குகிறது என்பதை முன்கூட்டியே என்னிடம் கூறி விடுவார்கள், எனவே அதற்கேற்றார்ப்போல் பயிற்சி செய்வோம்,” என்றார்.

மேலும், “எனவே நாங்கள் அவர்களின் பயிற்சி மற்றும் அதற்கேற்ற நேரத்தை மாற்றியமைப்பதால் அவர்கள் தங்கள் உடலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. எனவே அவர்கள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பயிற்சிகள் அல்லது போட்டிகளை எதிர்கொள்ள தயாராக முடிகிறது,” என்றார்.

பயிற்சியும் உணவு முறையும் வலிமைக்கான திறவுகோல் என்று அவர் வலியுறுத்துகிறார்.

“பெரும்பாலான ஜிம்னாஸ்ட்கள் விரைவில் பயிற்சியைத் தொடங்குவார்கள். அவர்களுக்கு 12 வயதாகும்போது, ​​அவர்களின் உணவு முறை குறித்து உணவு நிபுணரிடம் ஆலோசிக்கிறோம். அவர்களுக்கு போதுமான இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் கிடைப்பதை உறுதி செய்கிறோம். பெண்கள் தங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், மகளிர் மருத்துவ நிபுணரிடமும் போதுமான ஆலோசனைகள் பெற நாங்கள் ஏற்பாடுகளைச் செய்கிறோம்.”

மாதவிடாய் ஏற்படும் போது பயிற்சியைக் குறைத்துக் கொள்ளலாம் என்ற போதிலும் பயிற்சியை முற்றிலும் கைவிடும் நிலை ஏற்படாது.
தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது?

ஹாக்கி, கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளில், முழு அணிக்கும் ஒரே உடற்பயிற்சி விதியைப் பயன்படுத்த முடியாது. இப்போதெல்லாம் உடற்பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு பயிற்சிகளை பரிந்துரைக்கவேண்டிய தேவை உள்ளது.

ஆங்கில விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் பர்டன் கூறுகையில், “மாதவிடாய் என்பது பயிற்சி மற்றும் செயல்திறனுக்கான தடையாக நீண்ட காலமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதற்காக பயிற்சியைக் கைவிடுவதற்குப் பதிலாக உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்றவாறு அதை மாற்றியமைத்தலே சிறந்த வழியாக இருக்கும்,” என்றார்.

இந்த ஏற்றத் தாழ்வுகளைக் கண்காணிக்க வீராங்கனைகள் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்துகின்றனர்.

க்ளூ, ஃபிட்பிட் போன்ற செயலிகளை பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தைக் கண்காணிக்க உதவுகின்றன. FitRWoman என்ற செயலி கூடுதல் உதவிகளை அளிக்கிறது. இது ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சிக்கும் பயிற்சி செயல்பாடு, ஊட்டச்சத்து மற்றும் உடலின் தன்மை ஆகியவற்றின் வரலாற்றைப் பதிவு செய்து அதன் அடிப்படையில் செயல்படுகிறது.

இந்த செயலியை ஸ்போர்ட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான ஓரேகோ உருவாக்கி செயல்படுத்திவருகிறது. மேலும், டாக்டர் ஜார்ஜி புருயின்வெல்லின் ஆராய்ச்சி இந்த செயலியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

டாக்டர் புருயின்வெல்ஸ் அமெரிக்க கால்பந்து அணியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அந்த அணி வென்றபோது, ​​அதற்காக வீராங்கனைகள் தங்களைத் தயாரிக்கும் போது இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவியதாக அப்போது கூறப்பட்டது.

ஆனால் பயிற்சிக்கான விஷயங்கள் மட்டும் நவீனமடைகின்றன என நாம் நினைக்கமுடியாது. ஆடைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் பெண் வீராங்கனைகளின் தேவைகளை உணர்ந்து கசிவு இல்லாத ஆடைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.

விளையாட்டு வீராங்கனைகள் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்க வேண்டும் என மலையேறும் வீராங்கனை பிரியங்கா மோஹிதே கூறுகிறார்.

விளையாட்டு வீராங்கனைகள் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்க வேண்டும் என மலையேறும் வீராங்கனை பிரியங்கா மோஹிதே கூறுகிறார். ஆரம்பத்தில் மாதவிடாயைப் பற்றிப் பேசத் தயங்கியவர், இப்போது உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள், சிறுவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அதைப் பற்றியே பேசுகிறார்.

“அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மேற்கொண்ட பயணத்தின் போது, ​​எனது குழுவில் நான்கு பேர் இருந்தனர். நாங்கள் ஒரே கூடாரத்தில் தங்கினோம். நீங்கள் பேட்கள் அல்லது கப்களை மாற்ற வேண்டும் என்றால், வெளியில் காற்று மற்றும் பனிப்பொழிவு இருந்ததால் கூடாரத்திற்குள்ளேயே மாற்ற வேண்டும். அதனால்தான் நமது குழுவுடன் நம்பிக்கையான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.”

அர்ஜுனா விருது பெற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரான் பிபிசியிடம் பேசுகையில், பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் செலுத்தும் மல்யுத்த விளையாட்டில் மாதவிடாய் ஒரு தடையாகக் கருதப்படுகிறது.

இது குறித்து அவர் பேசியபோது, “பெண்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்று பயிற்சியாளரிடம் சொல்ல முடியாது. சுத்தமான கழிப்பறை இல்லை. பேட்களை மாற்றிக்கொள்ளுவதற்கான இடமும் இல்லை. மீண்டும் மீண்டும் கழிப்பறைக்கு செல்ல நேரிடும் போது, உடையில் கறை படிந்தால் பயிற்சியாளரிடம் என்ன சொல்வது, என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.

இங்கு பயிற்சியாளர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 30 ஆண்டுகளில் நிலைமை மிகவும் மாறிவிட்டது என்கிறார் ஹரிஷ் பரப்.

அவர் கூறுகிறார், “பெற்றோர்கள் முன்னெப்போதையும் விட அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர். எனவே பெண்களின் விளையாட்டுகளில் மாதவிடாய் பற்றி திறந்த உரையாடல் உள்ளது. பெண்களும் இதைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். மாதவிடாய் குறித்து மகளிர் பயிற்சியாளர் அல்லது மூத்த வீராங்கனைகளிடம் பேச முடியுமே,” என்றார்.

மேலும், பெண்களின் விளையாட்டுக்கு மிகவும் தேவைப்படுவது மாதவிடாய் குறித்த வெளிப்படையாகப் பேசுவதே ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.