இரு நாட்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட தபாலகங்கள்!

அம்பாறை மாவட்டத்தில் தபாலக ஊழியர்களினால் இரு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் வழமை போல இயங்க ஆரம்பித்துள்ளது.
நுவரேலியா உட்பட இதர தபால் அலுவலகத்தை விற்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி கடந்த 08 ஆம் திகதி முதல் இரு நாட்களுக்கு ( 48 மணித்தியாலங்கள்) நாடு முழுவதும் உள்ள தபாலகங்களின் பணிகள் நிறுத்தப்பட்டு அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்
இந்தப் போராட்டமானது இன்றுடன் (10) இடைநிறுத்தப்பட்டு வழமைபோன்று தபாலகங்கள் திறக்கப்பட்டு அதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஒன்றிணைந்த தொழிற்சங்க முன்னனியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட குறித்த அடையாள வேலை நிறுத்த போராட்டமானது ‘அஞ்சலின் பாரம்பரியத்தை விற்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்தியாவசிய சேவையாக
இதன் போது இரண்டு நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதான தபாற்கந்தோர் உட்பட 7 தபால் நிலையங்களின் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் (10) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அதே வேளை இப்போராட்டத்தை முன்னிட்டு அரசாங்கமானது தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.