;
Athirady Tamil News

தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது – மாவை!! (வீடியோ)

0

எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கவலை வெளியிட்டார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற கூட்டம்
இடம்பெற்றபோது அங்கு சென்ற டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் எழுத்து மூலம் உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நான் அந்த நிகழ்வுக்கு போக முடியவில்லை. இந்த விடயம் இரவோடு இரவாக ஊடகங்களுக்கு செய்திகளாக சென்றிருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் நடக்கின்ற நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாக பிளவுப்பட்டு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தில் டலஸ்
அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்று செய்தியை இரவில் தெரியப்படுத்தும் நிலை உருவானது. இது பாரதூரமான நிலைமை. அவ்வாறு உடன்பாடு ஏற்பட்டிருந்தால் அதனை வெற்றி பெற்றதற்கு பின்னர் வெளியிட்டிருக்க முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அது தெரிந்தால் போதுமானது. அதற்கிடையில் அதனை வெளியே கூறியதை ஏற்கமுடியாது. இதன் காரணத்தினாலும் எதிர்பாராத தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இந்தியா நிர்பந்தித்துதான் ரணிலுக்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்ற கருத்து அங்கு பேசப்பட்டு இருக்கின்றதென தகவல் வெளியாகியுள்ளது. அதனுடைய உண்மை எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் அவ்வாறு இந்தியாவினுடைய பெயரை உச்சரித்து அந்த தீர்மானத்தை எடுத்ததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். இது ராஜதந்திரமற்ற மூலோபாயமற்ற விடயம் என்பதுடன் ஒரு பிரச்சனையை உருவாக்கி இருக்கின்றது. இவ்வாறான செய்திகள் காரணமாக பலர் என்னுடன் சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு செய்தி வெளியான நிலையில் மறுநாள் காலையில் அவ்வாறான எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சுமந்திரனுடைய பெயரில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இவை எல்லாம் தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற செயல்களாகும். இதன் காரணமாக டலஸ் அழகப்பெரும எதிர்பார்த்த வாக்குகளை பெற முடியாமல் ரணில் எதிர்பார்த்த அளவுக்கு 134 வாக்குகள் பெறுகின்ற நிலைமையை உருவாக்கி இருக்கின்றது.

எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு கட்சியாக இருக்கும் போது இவ்வாறான தன்னிச்சையான செயற்பாடுகள் எவ்வளவு விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. எமது கருத்தில் நம்பிக்கையில்லை என்று இந்தியாவை இழுத்து பேச வேண்டிய சந்தர்ப்பத்தை நினைத்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

அவ்வாறு பாவித்துதான் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தால் அது பாரதூரமானது.
இந்த கருத்து மிகவும் பாதகமானது. முழுமையான எங்களுக்கு பலமாக இருக்கின்ற இந்தியாவினுடைய பெயரை கூறுவது மிகவும் தவறான செய்தியாகும். இதனால் பாரிய விளைவுகளை எதிர் நோக்க வேண்டி வரும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”



You might also like

Leave A Reply

Your email address will not be published.