;
Athirady Tamil News

எல்லையில் போர் பதற்றம்: 130 அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு

0

சிந்து நதி நீரை நிறுத்தினால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பஹல்காம் தாக்குதலையடுத்து, சிந்து நதி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதன்மூலம், பாகிஸ்தானுக்கு சிந்து நதி மூலம் வழங்கப்பட்டு வந்த நீரானது நிறுத்தப்படுகிறது. இதன் விளைவாக, பாகிஸ்தானின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படலாம்.

இந்த நிலையில், சிந்து நதி நீரை வழங்க மறுத்தால், இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி தெரிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, “எங்களுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால், இந்தியா போருக்குத் தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் உள்ள ராணுவ உபகரணங்கள், ஏவுகணைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்படவில்லை.

அணு ஆயுதங்களை எங்கு வைத்திருக்கிறோம் என்பது யாருக்கும் தெரியாது. பாகிஸ்தானுக்கான நீர் விநியோகத்தை இந்தியா நிறுத்தினால், ஷாஹீன், கஸ்னாவி, கோரி ஏவுகணைகளுடன் 130 அணு ஆயுதங்களும் இந்தியா மீது பயன்படுத்தப்படும்.

இந்தியாவுக்காகவே அணு ஆயுதங்களை வைத்துள்ளோம். இந்த நிலைமை தொடர்ந்தால், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் திவாலாகி விடும்’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜா்தாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.