;
Athirady Tamil News

ஒரு குடும்பத்தின் பலம்… ஒரு சமூகத்தின் பெருமை – இன்று உலக மகளிர் தினம்

0

பெண்ணின் மகத்துவத்தினை உலகிற்கு பறைசாற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந்தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக மகளிர் தினம் 2026 இன் இந்த வருடக்கருப்பொருள் “Give To Gain” என்பதாகும். இது பெண்களுக்கான பரஸ்பர ஆதரவை கொடுக்க வலியுறுத்துகிறது. அவ்வாறு தலைமை அதிகாரம் , சமத்துவ கல்வி, வேலைவாய்ப்புகள் கொடுக்கும்போது ஒட்டுமொத்த சமூகமும் உயர்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவித்திருப்பது ’உரிமை, நீதி, அதிகாரம்’. இது அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதாகும் (“Rights. Justice. Action. For All Women and Girls”).

உலக மகளிர் தினம் தோன்றியதற்கான விதை, கி.பி. 1789-ல் பாரீஸ் நகரில் போடப்பட்டது. அந்த ஆண்டில் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியின்போது, பெண்களுக்கும் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும், உழைப்புக்கேற்ற ஊதியம், 16 மணி நேரம் வேலை என்ற கால நேரத்தை குறைக்க வேண்டும், பெண்களுக்கு வாக்குரிமை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. 1857-ம் ஆண்டில் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் ஒன்று கூடி போராடினர்.

இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 1907-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போராட்டம் தீவிரமானது. 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் உலக சோஷலிச பெண்கள் மாநாடு நடந்தது. அதில் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் பங்கேற்று, அனைத்து நாட்டில் உள்ள பெண்களுக்கும் சேர்த்து மகளிர் தினம் ஒன்றை உருவாக்க வேண்டும், பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் ஆவணப்படுத்த வேண்டும், ஆண்களைப் போல பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும், எல்லாவற்றிலும் சமஉரிமை வேண்டும்” என்று பேசினார்.

அதன்படி சர்வதேச மகளிர் அமைப்பு தொடங்கப்பட்டு, 1911-ம் ஆண்டு முதலே டென்மார்க், ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிப்ரவரி 28-ந் தேதி பெண்கள் தினமாக இருந்தது. பிறகு ஒவ்வொரு பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. 1975-ம் ஆண்டில்தான் மார்ச் 8-ந் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடுவது என்று ஒருமனதாக முடிவுஎடுக்கப்பட்டது. இது தொடர்பான தீர்மானம், 1977-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.