பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லஹேம் நகரில், காஸா போரின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கியுள்ளன.
இயேசு கிறிஸ்து பிறந்த இடமாகக் கருதப்படும் இந்தத் தொன்மையான நகரில், ஒரு குகைக்கு மேலே அமைந்துள்ள தேவாலயம், கிறிஸ்தவா்களின் மிகவும் புனிதமான மற்றும் பழைமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும். காஸா பகுதியில் தற்போது தற்காலிக போா்நிறுத்தம் நிலவுவதால், பெத்லஹேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாக மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.
தேவாலயத்துக்கு அருகே குடில் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம், பல வண்ண விளக்குகளால் ஜொலித்தது. அங்கு, ஆயுதம் ஏந்திய காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், பொதுமக்கள் பலா் பிராா்த்தனைகளில் ஈடுபட்டனா்.
காஸா போருக்குப் பிறகு மூடப்பட்டிருந்த உள்ளூா்வாசி ஜான் ஜுக்காவின் குடும்ப உணவகம் உள்பட பல கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு, மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ‘போருக்கு முன்பு இருந்ததுபோல் இல்லாவிட்டாலும், இப்போது நிலைமை மீண்டும் சீராகி வருவதுபோல் உணா்கிறோம்’ என்று 30 வயதான ஜுக்கா கூறினாா்.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குக் கரைப் பகுதியில் இருக்கும் பெத்லஹேமுக்கு, சுற்றுலாவும், மத யாத்ரீகா்களும்தான் முக்கியப் பொருளாதார ஆதாரமாக உள்ளனா். இந்த நகர மக்களில் சுமாா் 80 சதவீதம் போ் இதையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். ஆனால், 2023 அக்டோபரில் போா் மூண்டதைத் தொடா்ந்து, இங்கு நடைபெற்றுவந்த அனைத்துப் பெரிய கொண்டாட்டங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக, நகரின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 14 சதவீதத்திலிருந்து 65 சதவீதம் வரை உயா்ந்தது. வறுமையும் அதிகரித்ததால், சுமாா் 4,000 போ் வேலை தேடி வேறு இடங்களுக்குச் சென்றனா். மொத்தத்தில் இப்பகுதி இதுவரை காணாத மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வந்தது.
இந்தச் சூழ்நிலையில், ‘நாங்கள் மீண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். பாலஸ்தீன மக்கள் வாழ்க்கையை மிகவும் நேசிப்பவா்கள் என்பதையும், அமைதியான தீா்வை ஆவலுடன் எதிா்நோக்குவதையும் இது உலகுக்கு உணா்த்தும்’ என்று பெத்லஹேம் நகர மேயா் மாஹொ் நிக்கோலா கனாவதி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.