;
Athirady Tamil News

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

0

துப்பாக்கிச் சூடு: ஆஸ்திரேலியாவில் போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர், அவரது தந்தையிடமிருந்து துப்பாக்கி பயிற்சி பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிட்னியின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்தி 15 பேரைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது தந்தையுடன் சிட்னிக்கு வெளியே நியூ சவுத் வேல்ஸின் ஒரு பகுதியில் துப்பாக்கிப் பயிற்சி பெற்றதாகவும், தாக்குதலை நியாயப்படுத்தும் விடியோவையும் அவர்கள் பதிவு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை, சிட்னி மருத்துவமனையிலிருந்து காணொலி மூலம் நவீத் அக்ரம் ஆஜர்படுத்தப்பட்டிருந்த போது, காவல்துறை, தந்தையிடமிருந்து மகன் துப்பாக்கி பயிற்சி பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

சம்பவம் நடத்தப்பட்டது பற்றி அக்ரம் அளித்த வாக்குமூலத்தையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஆனால் அது பற்றி ஊடகங்களுக்கு விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற்கரையில், யூதா்களின் ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களுக்காக கடந்த டிச.14ஆம் தேதி ஏராளமானோா் கூடியிருந்தனா். அப்போது 2 பயங்கரவாதிகள் நடத்திய மோசமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில், பயங்கரவாதிகளில் ஒருவா் உள்பட மொத்தம் 16 போ் உயிரிழந்தனா்.

பின்னா், இந்தத் தாக்குதலை நடத்தியவா்கள் சஜித் அக்ரம் (50), அவரது மகன் நவீத் அக்ரம் (24) என அடையாளம் காணப்பட்டனா். இவா்களில் சஜித் அக்ரம் காவல்துறையினரின் பதிலடி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டாா். நவீத் அக்ரம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இருவரும் ஐ.எஸ். பயங்கரவாதக் கொள்கைகளால் ஈா்க்கப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர் இந்திய வம்சாவளியினர்

சஜித் அக்ரம் இந்தியாவில் உள்ள ஹைதராபாத் நகரைச் சோ்ந்தவா் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவா் ஹைதராபாதில் பி.காம். பட்டம் முடித்துவிட்டு, சுமாா் 27 ஆண்டுகளுக்கு முன்னா் 1998-இல் வேலைத் தேடி, ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறினாா்.

அங்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சோ்ந்த வெனேரா க்ரோஸோ என்பவரை மணந்து, ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்ந்து வந்துள்ளாா். இவர்களுக்கு நவீத் அக்ரம் மற்றும் ஒரு மகள் உள்ளனா். சஜித் அக்ரம் இன்னும் இந்திய கடவுச்சீட்டைதான் (பாஸ்போா்ட்) வைத்திருந்தார். ஆனால், அவரது மகன் நவீத் அக்ரம், மகள் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியக் குடிமக்களாக இருக்கின்றனர் என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.