இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் கொண்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஆயினும், நாம் இன்னும் பல விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. இந்த அரசாங்கம் இலங்கை முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்த ஆட்சியில் நிலவும் ஊழல்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல செயல்பாடுகளுடன் நாங்கள் ஒருபோதும் உடன்படப் போவதில்லை. அதனால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பொதுத் தளத்தை உருவாக்க முயல்கிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு அடையாளங்கள் உள்ளன, அவை குறித்தும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சியினர் வலுவான போராட்டங்களை முன்னெடுப்பதில்லை என்ற எண்ணம் உள்ளது அது முற்றிலும் தவறானது. கடந்த சில வாரங்களாக முக்கிய ஊடகங்களைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், எமது மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் ஊடாக பல போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.
“தேசிய பாதுகாப்பு மற்றும் தற்போதைய சூழல் குறித்து எமது எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான அறிக்கையை வழங்கியுள்ளார். அதுவே எமது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும். ஜனாதிபதி தற்போது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கருத்துக்களைக் கூறி வருகிறார்.
