;
Athirady Tamil News

தந்தையினால் தாக்கப்பட்ட மாணவி ; O/L பரீட்சை எழுத உதவிய பொலிஸார்

0

தந்தையின் தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாதாரண தரப் பரீட்சை மாணவியொருவருக்கு, இன்று (23) நடைபெற்ற கணித வினாத்தாளை எழுதுவதற்கான வாய்ப்பை அழுத்கமை பொலிஸ் நிலையம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

தர்கா நகரைச் சேர்ந்த குறித்த மாணவி, கடந்த சனிக்கிழமை பரீட்சையை முடித்துவிட்டு தனது 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் சகோதரியுடன் நண்பி ஒருவரின் வீட்டிற்குச் சென்று, வீடு திரும்புவதில் தாமதமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, இரு மகள்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தாங்க முடியாமல், இரு மாணவிகளும் அழுத்கமை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் முறைப்பாட்டைப் பதிவு செய்து, இருவரையும் முதலில் அழுத்கமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு, மூத்த மகள் சம்பவம் குறித்து அழுத்கமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் சஞ்சீவவிடம் விளக்கமளித்துள்ளார்.

இதையடுத்து, இன்று காலை பொலிஸ் ஜீப் வண்டியுடன் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பி, தேவையான உணவு, பானங்கள் மற்றும் எழுதுகருவிகள் வழங்கப்பட்டு, வைத்தியசாலையின் அனுமதியுடன் மாணவி பரீட்சை நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

மாலை 4.10 மணிக்கு பரீட்சை முடிந்ததும், மீண்டும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மாணவி நாகொடை போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயின் பராமரிப்பின்றி தந்தையுடன் வசித்து வந்த மாணவிகள் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் தந்தை தற்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.