;
Athirady Tamil News

டிஜிட்டல் புரட்சியில் அடுத்த கட்டம் ; தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்

0

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்பத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உள்ள பொறுப்பு குறித்து ஜனாதிபதி இதன்போது விளக்கினார்.

இந்தமுறையை பொதுமக்களுக்கு மிகவும் வசதியானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுவதற்கு வங்கி முறைமையினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்கொள்ளும் தடைகளை நிவர்த்தி செய்வதற்கும், சமூகத்தில் இதனை விரைவாக பரவச் செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் ஊடாக பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குவது வங்கி முறைமைக்கு பெரும் செலவை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார்.

புதிய கொடுக்கல் வாங்கல் முறைக்கு மாறுவதன் மூலம் குறித்த செலவுகளைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த புதிய முறையானது பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை வழங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வங்கித்துறையின் சார்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கியின் பதில் பொது மேலாளரும் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான வை. ஏ. ஜயதிலக, டிஜிட்டல் தளங்கள் ஊடாகப் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள பொதுமக்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்தப் புதிய முயற்சிக்கு வங்கி முறைமை முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி இட்டுச் செல்லப் பங்களிப்பு செய்யும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.