;
Athirady Tamil News

தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குக! நாடாளுமன்றத்தில் ரஜீவன் எம்.பி. பிரேரணை

0

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார்.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
இவ்விடயம் குறித்து பிரேரணையில்,

இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்த முடியும்.

இதன் ஊடாக நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டுவதற்குப் பெரும் வாய்ப்புகள் ஏற்படும் என்று ரஜீவன் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் குறைந்த செலவில் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்யவும், அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளவும் இந்தப் போக்குவரத்து வழிவகை செய்யும். குறிப்பாக, வடக்கு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இது காணப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் வலுப்படுவதன் மூலம், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும். எனவே, இப்பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறித்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.