பிணை வழங்க முடியாது ; நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் அதிரடி மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமையைக் கருத்திற் கொண்டு, நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி கவீந்திர பெர்னாண்டோ, அவரது பெற்றோர் இருவரும் ஒரே நேரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டி, நாமலுக்குப் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், ஷிரந்தி ராஜபக்சவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நாமல் ராஜபக்ச அவர்களின் மூத்த மகன் என்பதால் பெற்றோரின் மருத்துவ நிலைமையைக் கருத்திற் கொண்டு அவருக்குப் பிணை வழங்க வேண்டும் என்றும் சட்டத்தரணி தனது வாதத்தில் குறிப்பிட்டார்.