;
Athirady Tamil News

இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது

0

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய சம்பவங்கள் தொடர்பில், முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வரை அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறை கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி உகன பகுதியில் மற்றொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதே பாணியில் திருடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில், திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர், சம்பவங்களின் பின்னர் கொழும்பு – கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று பேருந்து சாரதியாகப் பணியாற்றி வந்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (12) அம்பாறைக்குத் திரும்பியுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை ‘இன்’ விடுதிக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தங்கச் சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் அம்பாறை நகரிலுள்ள தங்கக் கடை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், திருடப்பட்ட இரண்டு தங்கச் சங்கிலிகளும் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

இதனையடுத்து, குறித்த தங்கக் கடையில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது, உருக்கப்பட்ட நிலையில் இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளும் மீட்கப்பட்டதுடன், அங்கு பணியாற்றிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மீட்கப்பட்ட தங்க நகைகளின் சந்தைப் பெறுமதி ஏழு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முதித பிரியங்கர ஆகியோரின் தலைமையில் பொலிஸ் குழுவினர் இந்தக் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.