இலங்கையில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! விதிக்கப்படவுள்ள தடை உத்தரவுகள்
சுற்றுச்சூழலுக்கும் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் ஐந்தாயிரம் வாகனங்கள் நச்சு கருப்பு புகையை வெளியிடுவதாக மோட்டார் வாகன போக்குவரத்துத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தகைய வாகனங்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் 0703500525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு வாழ் மக்களுக்கும் உடல்நல அச்சுறுத்தல்
நச்சுப் புகையை சுவாசிப்பதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் அறுபது இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும், உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நச்சுப்புகை நகர்ப்புறப்பகுதிகளிலும், குறிப்பாக கொழும்பு வாழ் மக்களுக்கும் உடல்நல அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, நச்சுப் புகையை வெளியிடும் வாகனங்களைக் கண்டறிய நாடு முழுவதும் பொலிஸாரும்,மோட்டார் வாகனப் பரிசோதகர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
தடை உத்தரவுகள்
அதற்கேற்ப அடையாளம் காணப்பட்ட வாகனங்களுக்குத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும், குறைபாடுகளைச் சரிசெய்து சீரமைக்குமாறு உத்தரவிடப்படும் என்றும், இல்லையெனில், அந்த வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அமைப்பிலிருந்து கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
அதன்படி, குறைபாடுகளைச் சரிசெய்யாத வாகனங்களுக்கு வருவாய் உரிமங்கள் வழங்கப்படாது என்றும்,நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நச்சுப் புகையை வெளியிடும் வாகனங்களுக்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.