;
Athirady Tamil News

கேக் பவுடரை சுவாசித்ததால் கோமா நிலைக்குச் சென்ற குழந்தை; எச்சரிக்கை பதிவு!

0

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 மாதக் குழந்தை டஸ்டின் (Dustin), கடந்த வாரம் தனது தாயார் கேக் தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த கேக் அலங்காரப் பொடியைச் சுவாசித்ததால் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேக் அலங்காரப் பொடியில் தாமிரம் மற்றும் உலோகத் தாதுக்கள் நிறைந்த அந்தப் பொடி, குழந்தையின் நுரையீரலில் இருந்த ஈரப்பதத்துடன் சேர்ந்து ‘பசை’ (Paste) போன்ற ஒரு படலமாக மாறியுள்ளது.

எச்சரிக்கை பதிவு….
இதனால் குழந்தையின் மூச்சுக்குழாய் அடைக்கப்பட்டு, அவன் நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த டஸ்டினை மருத்துவர்கள் செயற்கை கோமா (Induced Coma) நிலைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

தற்போது அவனது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவனது தாய் கேட்டி ராபின்சன், “என் மகன் இப்போது தானாகவே சுவாசிக்கத் தொடங்கியுள்ளான்” என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்ட பிறகு, டஸ்டின் தனது கண்களைத் திறந்து பார்த்த அந்த நொடியைத் தனது வாழ்வின் மறக்க முடியாத தருணமாக அவர் வர்ணித்துள்ளார்.

ஒரு சிறிய அஜாக்கிரதை ஒரு குழந்தையின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றதை எண்ணிக் கண்ணீர் மல்க அவர் பதிவிட்டுள்ள இந்தத் தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கேக் அலங்காரப் பொடிகள் விற்பனை செய்யப்படும் முறைகுறித்து ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.

உணவில் சேர்க்கக்கூடியவை (Edible) மற்றும் வெறும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுபவை (Non-edible decorations) என இரண்டு வகை பொடிகள் ஒரே இடத்தில் விற்பனை செய்யப்படுவதே இத்தகைய விபத்துகளுக்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.

டஸ்டின் சுவாசித்த அந்தத் தங்கம் போன்ற மினுமினுப்புப் பொடி, உண்மையில் உணவில் சேர்க்கக் கூடாத ஒன்று என தெரியவந்ததை அடுத்து தற்போது அந்தத் தயாரிப்பு சந்தையிலிருந்து உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் குர்இப்பிடப்பட்டுள்ளது.

டஸ்டின் இன்னும் சில வாரங்கள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றாலும், அவன் மரணத்தின் வாசலிலிருந்து மீண்டு வந்தது ஒரு மிகப்பெரிய அதிசயம் என மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் தங்களுக்கு உதவியாக இருந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிதி உதவி செய்த பொதுமக்களுக்குக் கேட்டியின் குடும்பத்தினர் தங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.