;
Athirady Tamil News

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என தீர்ப்பு; 16 ஆண்டுகள் கடூழிய சிறை

0

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் செய்த ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரண குணவர்தனவுக்கு எதிராக கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பை அறிவித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

16 ஆண்டுகள் கடூழிய சிறை
இதன்படி, பிரதிவாதிக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளதுடன், அது தொடர்பான விடயங்களை முன்வைக்கும் பணிகளில் சட்டத்தரணிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 600,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழக்குகளில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் தலா நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி சரண குணவர்தனவுக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே வழக்குகளுக்காக சரண குணவர்தனவுக்கு ரூ. 18 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்திற்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, “ஊழல்” குற்றச்சாட்டின்கீழ் கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் சரண குணவர்தனவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.