அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்குமா?
மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நகரங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குகள் ஈரானில் நடைபெற்று வந்தன.
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் போன்ற நகரங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
மேலும், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் அமெரிக்காவின் தாக்குதல்களால் 14 பேர் கொல்லப்பட்டதோடு, 78 பேர் காயமடைந்துள்ளனர். புஷேர், ஷபஹார், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட ஹோர்முஸ் நீரிணையை ஒட்டியுள்ள ஈரானிய நகரங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே தொடரப்பட்ட இந்த தாக்குதல்களால் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை சுமார் 12% வரை அதிரடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.