இந்திய தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் குறிகாட்டுவான் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி!
இந்திய தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் குறிகாட்டுவான் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி!
இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, தீவகத்தை சேர்ந்த கடற்தொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இன்று காலை ஒன்பது மணியிலிருந்து 11 மணி வரை பிரமாண்ட படகுப் பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது! 🛶
இப்போராட்டத்திற்கு தமிழ்த்தேசிய பேரவை நேரடியாகக் களமிறங்கித் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தது.
தமிழ்த்தேசிய பேரவை மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனநாயகத் தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கருணாகரன் குணாளன், ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா, மாதகல் கடற்தொழிலாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராடியிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த எவருமே கலந்துகொள்ளவில்லையென்றும் குறித்த கட்சியின் சில பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் தீவகத்திலுள்ள சில மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளை தொடர்புகொண்டு போராட்டத்தினை மேற்கொள்ளவேண்டாமென்று கூறி அச்சுறுத்தியதாகவும் போராட்ட களத்தில் தெரிவிக்கப்பட்டது.
