இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்பு
இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலின் வணிகம் மற்றும் சேவைத் துறைக்காக பணியாளர்களைப் அனுப்புவதற்கான இணைய முகப்பு இன்று வியாழக்கிழமை (03) காலை திறக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இதற்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று 10,000 விண்ணப்பதாரர்கள் நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க முடியும்.
இதில் 8,000 ஆண் விண்ணப்பதாரர்களுக்கும், 2,000 பெண் விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகார சபையான பீபா அமைப்பின் அறிவிப்புக்கு அமைய, இந்த இணைய முகப்பு திறக்கப்படுவதோடு, குறிப்பிடப்பட்ட 10,000 விண்ணப்பதாரர்கள் பூர்த்தியானதும் இணைய முகப்பு தானாகவே மூடப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.
25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட, ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறனுடைய மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை கொண்ட ஆண்களும் பெண்களும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
தோட்ட அலங்காரம் , மீள்சுழற்சி சேகரிப்பு சேவைகள், பொருட்கள் பொதியிடல், உணவு உற்பத்தி சார்ந்த பணிகள், பொருட்கள் கையாளுநர்கள் உட்பட மேலும் பல பணிகளுக்காக இந்த வேலைவாய்ப்புகள் திறக்கப்படுகின்றன.
இந்த பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பணி அனுபவம் இருப்பது அவசியமாகும்.
மேலும், இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக முன்னர் ஏதேனும் இரண்டு துறைகளின் கீழ் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திலும் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.