;
Athirady Tamil News

இஸ்ரேல் விமானத்தில் இந்திய விமானிக்கு கத்திக்குத்து: விமானத்தை வீழ்த்தும் திட்டத்துடன் சக விமானி தாக்குதல்

0

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற “ஃபிளைதுபை’ பயணிகள் விமானத்தில், நடுவானில் சக விமானியால் இந்திய கேப்டன் கத்திக்குத்து தாக்குதலுக்குள்ளானார்.

விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் புதன்கிழமை புறப்பட்ட ஃபிளைதுபை நிறுவனத்துக்குச் சொந்தமான “போயிங் 737 மேக்ஸ்’ விமானத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்திவிட்டு, விமானத்தை வீழ்த்தும் நோக்கில் கட்டுப்பாட்டை மாற்றியுள்ளார். இதனால், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், அடுத்த சில நிமிஷங்களில் சுமார் 17,000 அடிக்கு கீழே பறந்து, தள்ளாடியது.

விமானம் கட்டுப்பாட்டை இழந்து குலுங்கியதாலும், விமானி அறையிலிருந்து கேப்டனின் உதவிக் குரல் கேட்டதாலும் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த இஸ்ரேல் பயணிகள் சிலரும், அங்கு பயணம் செய்த சக ஊழியர் ஒருவரும் உடனடியாக விமானி அறைக்குள் நுழைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த கேப்டனைக் கடந்து, தாக்குதல் நடத்திய துணை விமானியை அவர்கள் போராடி மடக்கிப் பிடித்தனர். பின்னர், மற்றொரு ஊழியரால் விமானம் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, சவூதியின் தபூக் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. காயமடைந்த இரண்டு விமானிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய விமானியைக் கைது செய்துள்ள சவூதி அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, விமானம் கடத்தப்படுவதாக அஞ்சிய இஸ்ரேல் அரசு, உடனடியாகப் போர் விமானங்களையும் தயார் நிலையில் வைத்திருந்தது. இச்சம்பவத்தை ஒரு “பயங்கரவாதத் தாக்குதல் முயற்சி’ என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.

விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஃபிளைதுபை நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாகத் தெரியவரவில்லை; முறையான விசாரணைக்குப் பிறகே முழு விவரங்களும் வெளியாகும் என்று அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இந்திய விமானிக்கு இஸ்ரேல் பிரதமர் புகழாரம்

இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு புகழாரம் சூட்டி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சாரின் அசாதாரண துணிச்சலுக்கு எனது வணக்கங்கள். கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த நிலையிலும், அவர் தாக்குதல் நடத்தியவரை எதிர்த்துப் போராடியுள்ளார். அத்துடன் விமானி அறையின் கதவைத் திறந்து பயணிகள், விமானப் பணியாளர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்தவும் ஸ்மித் மச்சார் உதவியுள்ளார் அவர் உண்மையான கதாநாயகன் ஆவார் என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.