எரிபொருள் விற்பனையில் தொடரும் நஷ்டம் ; மீண்டும் 500 ரூபாயை தாண்டியுள்ள சூப்பர் டீசல் விலை
உலக சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் ஒட்டோ டீசல் ஒரு லீற்றருக்கு 66 ரூபாய் நஷ்டத்தில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருள் விலைத் திருத்தம் தொடர்பாக நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு லீற்றர் பெட்ரோலுக்கு 52 ரூபாயும், ஒரு லீற்றர் சூப்பர் டீசலுக்கு 53 ரூபாயும் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய விலைத் திருத்தத்தின் போது, ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 15 ரூபாயாலும், ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாயாலும், சூப்பர் டீசலின் விலை 50 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சூப்பர் டீசலின் புதிய விலை ஒரு லீற்றருக்கு 528 ரூபாயாக அதிகரித்துள்ளது. உத்தியோகபூர்வ எரிபொருள் விலைத் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டு மார்ச் 02ஆம் திகதி சூப்பர் டீசல் ஒரு லீற்றர் 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் விலை மீண்டும் 500 ரூபாயைத் தாண்டியுள்ளது. பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத் திருத்தத்துக்கு இணையாக லங்கா ஐஓசியும் தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியுள்ளது.
இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் சூப்பர் டீசலின் விலை 500 ரூபாயைத் தாண்டியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.