;
Athirady Tamil News

டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறி மூதாட்டியிடம் ரூ.2.48 கோடி கொள்ளை

0

புது டெல்லி,

டெல்லியில் 75 வயது மூதாட்டி ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்ததாகக் கூறி, கம்பாடியாவைச் சேர்ந்த மர்ம கும்பல் ரூ.2.48 கோடியை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடியின் தொடக்கம்
டெல்லியின் வசந்த் குஞ்ச் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி விபா (வயது 75). இவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி அன்று விபாவின் லேண்ட்லைன் எண்ணிற்கு ஒரு போலி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விபாவின் மொபைல் எண் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற பயங்கரவாத வழக்குகளில் சிக்கியுள்ளதாக கூறி மிரட்டியுள்ளார்.

22 நாட்கள் ஆன்லைன் சிறைபிடிப்பு
பயந்துபோன முதாட்டியை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் நடித்த கம்போடியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேசக் கும்பல், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக 22 நாட்களுக்கும் மேலாக 24 மணி நேரமும் ஆன்லைனில் சிறைபிடித்து (டிஜிட்டல் கைது) வைத்திருந்தது. மேலும், அவர் யாரிடமும் பேசக்கூடாது என்றும், மீறினால் சிறையில் அடைப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.

வீட்டை விற்க வைத்த கொடூரம்
விசாரணை என்ற பெயரில் முதாட்டியின் வீட்டிற்கே தங்களது போலி ஆட்களை அனுப்பிய மோசடிக் கும்பல், அவரை வற்புறுத்தி வசந்த் குஞ்ச் பகுதியில் இருந்த அவரது வீட்டை விற்க வைத்து ரூ. 2.40 கோடியைப் பறித்துக் கொண்டது.

நகைகள் -சேமிப்பு கொள்ளை
வீட்டுப் பணம் மட்டுமன்றி, அவரிடமிருந்த 83.5 கிராம் தங்க நகைகளை (வளையல்கள், செயின் மற்றும் கம்மல்கள்) கட்டாயப்படுத்தி முத்தூட் பின்கார்ப்பில் அடகு வைக்கச் செய்து சுமார் ரூ. 4.95 லட்சத்தையும், அவரது பேங்க் ஆப் மகாராஷ்டிரா கணக்கிலிருந்து ஆன்லைன் மூலமாக ரூ. 3 லட்சத்தையும் அந்த கும்பல் சுருட்டியுள்ளது. இவ்வாறாக, வீடு, நகைக்கடன் மற்றும் வங்கிச் சேமிப்பு என அனைத்தையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ. 2.48 கோடிக்கும் அதிகமான பணத்தை அந்த மூதாட்டி கொள்ளையர்களிடம் இழந்துள்ளார்.

சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் மனு
இந்த பணமோசடி குறித்து தகவல் அறிந்த விபாவின் மகள், டெல்லி போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்தார். ஆனால், குற்றவாளிகள் கம்போடியாவில் இருந்து செயல்படுவதால் டெல்லி போலீஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றக் கோரி விபாவின் குடும்பத்தினர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.