;
Athirady Tamil News

அர்மேனியா நாடாளுமன்றத்தில் ஆவேசமாக தாக்கிக்கொண்ட உறுப்பினர்கள்

0

அர்மேனியா, கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு. இதன் எல்லைப் பகுதிகளாக மேற்கே துருக்கி, வடக்கே ஜார்ஜியா, கிழக்கே அசர்பைஜான், தெற்கே ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.

சோவியத் ரஷியாவில் இருந்த அர்மேனியா முதன்முதலில் 1991 செப்டம்பரில் தான் சுதந்திர நாடானது.

இந்தநிலையில், அர்மீனியா நாடாளுமன்றத்தில் தணிக்கைச் சபை உறுப்பினர் ஒருவரைத் தேர்வு செய்வது தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆளும் சிவில் ஒப்பந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாரோன் சாகோயன் (Taron Chakhoyan), எதிர்க்கட்சித் தலைவரான நரெக் கராபெத்தியனின் (Narek Karapetyan) உறவினர் ஒருவர் தேர்தலுக்கு முன்பாகத் தெரிவித்ததாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்தை எழுப்பியதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால், பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தனியாக ஒரு “பெண்களைத் திருப்திப்படுத்தும் அமைச்சகம்” அமைக்கப்படும் என்று கராபெத்தியனின் உறவினர் கூறியதாகச் ஆளும் கட்சி உறுப்பினர் சாகோயன் குறிப்பிட்டார். அந்தக் கருத்துக்கு இதுவரை அவர் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தக் கருத்தால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியான ஸ்ட்ராங் ஆர்மீனியா அணியின் தலைவர் கராபெத்தியன், முதலில் தனது இருக்கையில் இருந்தபடியே பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அவர் எழுந்து சபாநாயகர் மேடை நோக்கிச் சென்றார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையேயான வாக்குவாதம் மேலும் தீவிரமடைந்தது. வார்த்தைப் போராகத் தொடங்கிய மோதல், சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது.

மோதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கைகளால் தாக்கியதுடன், கால்களாலும் உதைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அரசியல் அணிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் இந்த மோதலில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற போர்க்களமாக காட்சி அளித்தன.

அர்மேனியா நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதத்தின்போது அது வாக்குவாதமாகி, திடீரென ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.