;
Athirady Tamil News

எல்லை மீள்நிர்ணய அறிக்கை மீது எழும் கேள்விகள் !! (கட்டுரை)

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, தேர்தலை நடத்துவதற்கு சாதகமான நிலைமைகள் நாட்டில் இல்லை என்பது, முன்னமே நன்றாக தெரிந்திருந்த சூழ்நிலையிலும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, பின்னர் காரணங்களைச் சொல்லி காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவடைந்து, நேரடியாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான நிகழ்தகவுகள் அதிகரித்து வருகின்றது.

அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் போக்குகளும், தேர்தல் காலத்தில் பிரசாரப்படுத்தும் நோக்கத்துக்காக இனவாதத்தை உருவேற்றுவதற்காகவும், பயங்கரவாதம் குறித்து பயங்காட்டுவதற்காகவும் அங்குமிங்குமாக எடுக்கப்படுகின்ற எத்தனங்கள், பெரிய தேர்தல் ஒன்றுக்கான அடித்தளங்கள் என்றே மக்கள் பேசிக் கொள்வதை அவதானிக்க முடிகின்றது.

இதுவெல்லாம் ஒருபுறமிருக்க, எல்லை மீள்நிர்ணயகுழு தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்கின்றது. இந்தப் பின்னணியில். உள்ளூராட்சி தேர்தல் இனி நடைபெறுமாயின் அது புதிய எல்லைகளின் அடிப்படைலேயே இடம்பெறலாம் என்றும் சிலர் அபிப்பிராயப்படுவதாகத் தெரிகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரான மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு, பல மாதங்களாக முயற்சிகளை செய்து, பல பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் செய்த பின்னர் தமது அறிக்கையை கையளித்துள்ளது.

இருப்பினும், ஏனைய எல்லா ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளைப் போலவே, இந்த அறிக்கையும் பரந்துபட்ட விதத்திலான, நூறு சதவீதம் சரியான ஓர் அறிக்கையா என்பது பரிசீலனைக்குரியது.

இந்நிலையில், இந்த அறிக்கையில் பல குறைபாடுகள் உள்ளதாக எஸ். சிறிதரன் உள்ளிட்ட ஓரிரு தமிழ் எம்.பிக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சமகாலத்தில், எல்லை மீள்நிர்ணயமானது முஸ்லிம்களுக்கு பாதகமாக அமைந்துள்ளதாக பல முஸ்லிம் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல்வேறு காரணங்களுக்காக எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்டதை நாம் அறிவோம். குறிப்பாக, உள்ளூராட்சி சபைகளின் எல்லை முரண்பாடுகள், ஏற்கெனவே எல்லை நிர்ணயத்தில் காணப்படும் குறைபாடுகளை நீக்குவதும், சரியான எல்லைகளை மீள்வரையறை செய்வதும் வெளிப்படை நோக்கமாகும்.

மிக முக்கியமாக, உள்ளூராட்சி மன்றங்களினதும் அவற்றின் உறுப்பினர்களினதும் எண்ணிக்கையை 50 சதவீதத்தால் குறைக்கும் நோக்கத்துடனே எல்லை மீள்நிர்ணய குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமையால் சுமார் 8,500 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை தொடர்ந்தும் கொண்டிருக்க முடியாது என்ற நிலையில், இந்த எண்ணிக்கையை 50 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

இதில் பல நியாயங்கள் உள்ளதை மறுப்பதற்கில்லை. அதுமட்டுமன்றி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உதவி வழங்கும் வெளித்தரப்பின் நிபந்தனைகளில் ஒன்றாக இதுவும் இருக்கலாம்!

அரசியல் தரப்புகளைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு இதற்கப்பாலான பல உபகாரணங்களும் இருக்கலாம். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழ்கின்ற இனக் குழுமத்தின் பிரதிநிதித்துவத்தை மாற்றியமைத்தல், மாகாண எல்லைகளை மீள்நிர்ணயம் செய்வதற்கான ஓர் அடிப்படையை ஆரம்பித்து வைத்தல் போன்றன அவற்றுள் உள்ளடங்கலாம்.

எதுஎவ்வாறிருப்பினும், எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் நோக்கினால், சிறுபான்மை சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் வட்டாரங்கள், புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் துண்டாடப்பட்டு, அந்த வட்டாரங்கள் பெரும்பான்மை சமூகத்தின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகின்றது.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தென்இலங்கையில் அதாவது வடக்கு, கிழக்குக்கு வெளியே இதன் பாதிப்பு அதிகமானதாக இருக்கும் என்ற அச்சத்தை முஸ்லிம் அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஏனைய சில இடங்களிலும் இந்நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். “பொது மக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஆர்வமுள்ள சமூக அமைப்புகளின் ஆலோசனைகளும் கருத்துகளும் கோரப்பட்டன. கிடைக்கப் பெற்ற ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், எல்லை நிர்ணய அறிக்கையால் நடைமுறையில் சிறுபான்மை இனக் குழுமங்களுக்கு சிறுசிறு பாதக நிலைகள் ஏற்படலாம் என்று அவர் கூறிய செய்தி ஒன்றையும் எங்கோ காண முடிந்தது.

எவ்வாறிருப்பினும், பல உள்ளூராட்சி சபைகளில் சிறுபான்மைச் சமூகத்தின் குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் வகையில் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதி, அதன் நடவடிக்கைகள் என்பவற்றைப் பார்க்கின்ற போது, அவசர அவசரமாக தமக்கு விரும்பிய விதத்தில் சில விடயங்கள் கையாளப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

மொத்தமாக, நாட்டில் உள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் எல்லை மீள்நிர்ணயம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்ட போதிலும், அதிக பிரதேசங்களில் முஸ்லிம்களினதும் மற்றும் சில பகுதிகளில் தமிழர்களினதும் பிரதிநிதித்துவம் இலக்கு வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி வலுவாக எழுவதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

எல்லை மீள்நிர்ணய குழுவின் அறிக்கை சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தும் அல்லது குறைக்கும் வகையிலே அமைந்துள்ளது என, முஸ்லிம் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்தோடு, திட்டமிட்டபடி குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் எனவும் அவர்கள் கோரியுள்ளதாக அறிய முடிகின்றது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி இது பற்றி கருத்துக் கூறுகையில், “எமது நாட்டில் எந்தவோர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டாலும் அதில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவது வழக்கமானது. அந்த வரிசையில் புதிய எல்லை நிர்ணயத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, ‘காலம் பிந்தியாவது சூரிய நமஸ்காரம்’ செய்வதற்கு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வந்துள்ள போதிலும், 90 சதவீதமான முஸ்லிம் எம்.பிக்களும் ஏனைய அரசியல்வாதிகளும் இன்னும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருக்கின்றனர். இந்த அறிக்கையின் தார்ப்பரியம் குறித்து அவர்கள் அறிந்திருப்பார்களா என்பது கூட சந்தேகத்திற்குரியது.

புதிய எல்லை நிர்ணய அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சிபாரிசுகள் பொதுவாக, சிறுபான்மைச் சமூகத்தையும் குறிப்பாக முஸ்லிம்களையும் பாதிப்பதாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இதற்கு இன்னுமொரு பக்கமும் இருக்கிறது.

எல்லை மீள்நிர்ணய குழு எதோ ஓர் அடிப்படையில் தமது பணியிலக்கை நிவர்த்தி செய்திருக்கின்றது. இதில் சரிகளும் தவறுகளும் இருக்கலாம். அத்துடன், இது இன்னும் சட்ட அந்தஸ்துப் பெறவும் இல்லை.

முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டும் அதிகமாக இருந்தால், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் நிறைவேறி விடுமா என்பதையும், அந்தப் பிரதிநிதித்துவங்கள் காத்திரமானவையாக இருக்கவும் வேண்டும் என்பதையும் இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

அதேவேளை, எல்லை மீள்நிர்ணய விடயத்தில் இதுவரை முஸ்லிம் சமூகம் எந்தளவுக்கு அக்கறை காட்டியது என்பது முக்கியமாக விடைகாணப்பட வேண்டிய கேள்வியாகும். ஏனெனில், “பெரும்பாலான பிரதேசங்களிலிருந்து ஆலோசனைகள் கிடைக்கவில்லை” என மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளமை கவனிப்புக்கு உரியது.

எல்லை மீள்நிர்ணயம் ஒன்றும் இரகசியமாக மேற்கொள்ளப்படவில்லை. இரவோடிரவாக செய்யப்படவும் இல்லை. பகிரங்கமாக அறிவிக்கப்பட்டே முன்னெடுக்கப்பட்டது. இது விடயத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் கவனமாக செயற்பட்டார்கள். குழுவின் முன்னிலையில் செயற்பாட்டாளர்கள் சிலர் தமது கருத்துகளை முன்வைத்தார்கள். ஆனால், மீதமுள்ள முஸ்லிம் சமூகம் என்ன செய்து கொண்டிருந்தது என்ற மீள்வாசிப்பு இங்கு முக்கியமானது.

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் எந்தளவுக்கு முக்கியமானவை என்பதை முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய செயற்பாட்டு அரசியல்வாதிகளும் உணர்ந்து, அதில் சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக முழுமூச்சுடன் செயற்பட்டிருக்க வேண்டும்.

சமூக சேவகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் புத்திஜீவிகளும் அமைப்புகளும் மட்டுமன்றி பள்ளிவாசல்கள் போன்ற அமையங்களும் இவ்விடயத்தில் விழிப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் இதிலுள்ள வழுக்கள் இன்னும் குறைவாக இருந்திருக்கலாம்.

இப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அதாவது பஸ் புறப்படும் நேரத்தில் ஓடிவந்து, “அதில் தவறு உள்ளது” என்று கூறுவது, பக்குவமான அரசியலுக்கு உரிய பண்பில்லை என்பதை முஸ்லிம்களும் தமிழர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எது எப்படியிருப்பினும், இறுதி அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டு சட்ட அந்தஸ்துப் பெறுவதற்கு இடையில், இயலுமான சகல முயலுகைகளையும் மேற்கொண்டு எல்லை மீள்நிர்ணயத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் உள்ளுராட்சி உறுப்பினர்களின் தரமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எல்லை மீள்நிர்ணயத்தின் ஊடாக நடந்தேறியுள்ள வழுக்கள் சீர்செய்யப்பட்டு முஸ்லிம்கள், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதற்காக பாடுபட வேண்டுமேயொழிய, சிங்கள மக்களின் பிரதிநிதித்துவத்தை குறிவைப்பது நமது நோக்கமாக இருக்க முடியாது. நல்லெண்ணம்தான் வெற்றி பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.