;
Athirady Tamil News

இனமுரண்பாட்டின் தோற்றுவாயில் சாதியம் !! (கட்டுரை)

0

இலங்கையின் இனமுரண்பாட்டைப் புதிய தளத்துக்கு நகர்த்தியதில் கறுப்பு ஜூலை வன்முறைகளுக்கு முக்கிய பங்குண்டு. இதைச் சரிவர விளங்க, இலங்கையின் இனத்துவ, தேசிய இன உணர்வுகளின் வரலாற்று விருத்தியையும் முரண்பாடுகளின் விருத்தியையும் அவை தேசிய இன முரண்பாடாகவும் ஒடுக்குமுறையாகவும் போராகவும் மாறிய வரலாற்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை என்பது, மூன்று தசாப்தகாலம் நீடித்த ஒரு போர் என்ற குறுகிய பார்வையின் வழி வெளிப்படுகிறது. இவ்வுரையாடல்கள், பிரச்சினையையும் அதன் வரலாற்றையும் பற்றிய அகச்சார்பான விளக்கங்களாலும் குறுகிய குறிக்கோள்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளன.

இனமுரண்பாட்டின் வேர்கள், அகச்சார்பான விளக்கங்களைக் கொண்டவை. இதற்குச் சிங்களப் பெருந்தேசியவாதமும் தமிழரின் குறுந்தேசியவாத நிலைப்பாடுகளும் பெரும் பங்களித்துள்ளன. இந்த விளக்கங்கள், இனக்குழுக்களினதும் தேசிய இனங்களினதும் அடையாளங்களின் உருவாக்கத்தில் சாதி, பிரதேசம், வர்க்கம் என்பனவற்றின் பங்களிப்பை, அடையாளம் காணுவதில் கவனம் குவிக்கத் தவறியுள்ளன.

இலங்கையின் கொலனியாதிக்க கால அரசியல் வரலாற்றில், சாதி தவிர்க்கவியலாத பங்காற்றியுள்ளது. 1505 ஆம் ஆண்டு முதல் இலங்கை பகுதி பகுதியாக கொலனியாதிக்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டாலும், கண்டி இராச்சியம் 1815 வரை நிலைத்தது. இது, சிங்களவரிடையே கண்டி இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், நிலவுடைமைத் தன்மை வாய்ந்த சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கும் சாதிய அடுக்குகள் இறுக்கமடைவதற்கும் வழிவகுத்தன.

‘கோவிகம’ மேட்டுக்குடி சாதியினர் கொலனியாதிக்கத்துடன் நெருக்கமான உறவை வைத்திருந்தமையால், அவர்களால் பொருளாதார ரீதியில் மேல்நிலையில் இருக்க முடிந்தது. சாராயக் குத்தகை மூலம் பெருஞ்செல்வந்தர்களாக மாறிய ‘கராவ’ சமுகத்தினர் கல்வி, வியாபாரம் ஆகிய துறைகளில் தம்மை ஈடுபடுத்தி, வலிய அரசியல் சக்தியாக மாறினர்.

ஓல்லாந்தர் காலத்தில் செல்வாக்கு உள்ளவர்களாக இருந்து ‘சரிந்த சலாகம’ சாதி, கள்ளிறக்கும் தொழிலுடன் தம்மைத் தொடர்புபடுத்திய ‘துராவ’ சாதி ஆகியவற்றின் உயர் வர்க்கத்தினர் கல்வியறிவிலும் சிறுவணிகத்திலும் ஈடுபட்டு மேநிலையாக்கமடைந்தனர். இம்மூன்று சாதியினரும் ‘கொவிகம’ மேட்டுக்குடியினருடன் அரசியல் ரீதியாக போட்டியிட்டனர். இவர்களிடையே கடும் போட்டி நிலவியது.

இவர்களுக்கிடையிலான அரசியல் போட்டி 20ஆம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதி வரைத் தொடர்ந்தது. இந்த அரசியல் போட்டி இனத்துவ முரண்பாடு முழுமையாகத் தன்னை வெளிக்காட்டுவதைத் தாமதப்படுத்தியது. அதற்குக் காரணங்கள் பல உள்ளன.

முதன்மையானது, சிங்கள – தமிழ் உயர் சாதியினருக்கு இடையிலான நெருக்கம். அரசியல் ரீதியாக மிகுந்த செல்வாக்கும் கொலனியாதிக்கத்தின் நம்பிக்கைக்குரிய சேவகர்களாக இருந்த ‘கொவிகம’ மேட்டுக்குடியினருக்கும் யாழ். மைய ‘வேளாள’ மேட்டுக்குடியினருக்கும் இடையிலான நல்லுறவு, உயர்சாதிய உயர்வர்க்க உறவால் உருவாகி நிலைபெற்றது.

இருபதாம் நூற்றாண்டின் முதற்கால் நூற்றாண்டுவரை சிங்களவர்-தமிழர் என்ற முரண்பாடு மேலெழாமைக்குச் இன்னும் சில காரணிகள் இருந்தன. இலங்கை விவசாய மையப் பொருளாதாரமாக இருந்தபோது, இரு சமூகங்களுக்கு இடையிலான விவசாயப் போட்டி இருக்கவில்லை. இருவரது பிரதேசங்களும் வேறு வேறானவையாக இருந்தன. விவசாய நிலத்துக்கான போட்டி இருக்கவில்லை.

அதேவேளை, வர்த்தகத்தில் தமிழர்கள் எவ்வகையிலும் சிங்கள வணிகர்களுக்குப் போட்டியாக இருக்கவில்லை. அரசாங்க உத்தியோகத்தைப் பொறுத்தவரையில், சிங்களவர்களுக்குப் பெரும் நாட்டம் இருக்கவில்லை. தமிழரும் பறங்கியரும் ஆங்கிலம் கற்று, அரசாங்கப் பணிகளை நாடியளவு சிங்களவர்கள் நாடவில்லை.

அதேவேளை, பணி வெற்றிடங்களுக்குப் பெருமளவு போட்டி இருக்கவில்லை. படித்த தமிழர்கள் பலர், வேறு பிரித்தானியக் கொலனிகளுக்கு வேலை தேடிச் சென்றார்கள். முதலாம் உலகப் போர் அதைத் தொடர்ந்த பொருளாதார மந்தநிலை என்பவற்றால் காலப்போக்கில் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைந்தன. இதனால், தமிழர்கள் இலங்கையில் அதிகளவான அரச உத்தியோகங்களை நாடினர். அப்போது தமிழர்களுக்கும் பறங்கியருக்கும் இடையே போட்டி நிலவியது.

இந்தப் போட்டி என்பது, இவ்விரு சமூகங்களுக்கு இடையிலான போட்டியல்ல. மாறாக, இரு சமூகங்களிலும் உயர்குடியில் இருந்த கற்றோருக்கு இடையிலான போட்டியாகும். கல்விக்கும் சாதிக்கும் இடையிலான உறவு குறித்து, இவ்விடத்தில் இரண்டு விடயங்களை மனங்கொள்வது முக்கியம்.

வடக்கில் தமிழரிடையே வேளாளரது ஆதிக்கம், வெறுமனே நிலத்தின் மீதான ஆதிக்கமாக மட்டும் இருக்கவில்லை. சாதிப் படிநிலையின் அடிப்படையிலும், அதற்கும் மேலாக, பொருள் வசதியின் அடிப்படையில் சாதிப் பிரிவு ஒவ்வொன்றுக்குள்ளும், கல்வி, உத்தியோக வாய்ப்புகளை மறுக்கும் அதிகாரத்தையும் பேணி வந்தது. இதனால் தமிழ்ச் சமூகங்களில் கல்வி வாய்ப்புகள் வேளாள உயர்குடி அல்லாதோருக்கு மறுக்கப்பட்டன.

இந்த மறுப்பு, பல வடிவங்களில் நிகழ்ந்தது. வேளாள உயர்குடி மனோபாவம் சமூகத்தில் இருந்த ஏனையோரை பல்வேறு அடிப்படைகளில் வேறுபட்டவர்களாக நோக்கியது. வடபுலத்தில் வாழ்ந்து வந்த ரோமன் கத்தோலிக்கர்கள், புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் மத அடிப்படையில் ‘நம்மவர் அல்ல’ என அறியப்பட்டனர்.

நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் வாழும் மட்டக்களப்பு தமிழர்கள், மேற்குக் கரையோர தமிழர்கள் ஆகியோர் புவியியல் அடிப்படையில் ‘மற்றவர்கள்’ எனப்பட்டனர். ஆழ்ந்து நோக்கின், இதன் அடிப்படையாக சாதியே இருந்தது. அதிகாரமும் கல்வி வாய்ப்புகளும் ஒருங்கே பெற்றிருந்த சைவ வேளாளர்கள், அதை ஏனைய சமூகங்களுக்கு மறுப்பதை தொடர்ச்சியாக உறுதி செய்து வந்ததார்கள்.

சிங்கள சமூகத்தில் பிரதான ஆதிக்க சாதிக்களுக்கு வெளியே இருந்த சாதியினர் ஒடுக்குமுறைக்கு ஆளாகினார்கள். கண்டி இராச்சியத்தில், தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்த ‘பத்கம’ போன்ற சமூகங்கள், சுதந்திரத்துக்குப் பின்பும் அதே படிநிலையிலேயே இருந்தனர்.

அதைப்போலவே இருந்த ‘வகுபம்புர’ சமூகத்தினரும் சிறுவணிகத்தின் உதவியுடன் சிறிது மேல்நிலையை அடைந்தனர். இவ்வாறு முன்னேற்றமடைந்த சமூத்தினருக்கு கல்வி, உயர்தொழில் வாய்ப்புகளை சிங்கள உயர்குடியினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த விடயத்தில், சிங்கள – தமிழ் சாதிய ஒடுக்குமுறை, ஒரே வகைப்பட்டதாக இருந்தாலும் முக்கியமானதொரு வேறுபாடு இருந்தது.

சிங்களவர்களிடையே ‘சாதித்தடிப்பு’ மிகவும் அதிகமாக இருந்த கண்டிய சிங்களப் பகுதிகளில் கூட, யாழ். குடாநாட்டில் நடைமுறையில் இருந்தளவு மிகக் கொடுமையான தீண்டாமைகளோ, பாகுபாடுகளோ நிலவவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தச் சாதிய வேறுபாடுகள் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு உள்ளும் சமூகங்களுக்கு இடையிலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கத் தொடங்கின. ஒருபுறம் சமூகங்களுக்குள் முரண்பாடுகள் வலுத்தன.

சாதிய அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்கள், கல்வியின் உதவியுடனும் வணிகத்தின் உதவியுடனும் மெதுவாக சமூகப் படிநிலைகளில் மேலேறத் தொடங்கினர். இது அதிகாரத்தில் இருந்த உயர்சாதிய மேட்டுக்குடிகளுக்கு சவாலானது.

வடபுலத்தில் கிறிஸ்தவ மிசனரிகளின் வருகை யாழ். சமூக அசைவியக்கத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. கல்வியும் மருத்துவமும் உயர்சாதியினருக்கு என்ற நிலையில், மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

இதேவேளை, 1896இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுருட்டுத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், வடபுலத்தில் அதிகாரத்துக்கு எதிரான முதலாவது ஒருங்கிணைந்த குரலாக ஒலித்தது. சிங்கள சமூகத்தில் கல்விக்கான வாய்ப்புகள் திறந்தன. பௌத்த மீளெழுச்சியை சாத்தியப்படுத்த, சாதியம் கடந்த இயக்கத்தின் தேவை உணரப்பட்டது. அதேவேளை, பிரித்தானிய கொலனிய ஆட்சியில் தங்களுக்கான அதிகாரப் போட்டி நிலவியது. சாதி அடிப்படையிலும் கண்டிச் சிங்களவர் – கரையோரச் சிங்களவர் என்ற அடிப்படையிலும் சிங்களவர்கள் தங்களுக்குள் முரண்பட்டனர்.

மறுபுறம், இரு சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தோற்றம் பெறத் தொடங்கின. அதிகாரத்துக்கான போட்டி அடுத்த கட்டத்தை அடைந்த நிலையில், சிங்கள – தமிழ் உயர்குடி வர்க்கத்தினரிடையே மறைமுகமான ஒரு போட்டி நிலவியது. இந்தப் போட்டி அரசியல் அதிகாரம் பற்றியதாக இருந்தது.

இவ்விருவகைப்பட்ட நெருக்கடிகளும் உயர்சாதி மேட்டுக்குடிகளை நெருக்கடிக்குள் தள்ளின. இந்நெருக்கடிகளை தத்தமது சமூகங்களுக்குள் தீர்த்துக் கொள்வதற்கும் தமது மேநிலையாக்கத்தைக் தக்கவைத்துக் கொள்ளவும் சிங்கள-தமிழ் உயர்குடிகள் புதிய வழிகளைத் தேடினர். தத்தமது இனக்குழுக்களின் முழுமையான ஆதரவைத் திரட்டுவது அவசியம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

இந்தப் பின்புலத்தில் இனத்துவ மையப்பட்ட தேசியவாதம் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. ஆனால், தத்தமது அக முரண்பாடுகளைக் கையாள்வதற்கு மதமே பொருத்தமான கருவி என்று அவர்கள் கருதினர்.

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மிசனரிகளின் வருகை மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்த நிலையில், கிறிஸ்தவத்திற்கு எதிரான சைவசமய மீளெழுச்சியை தங்களது ஆயுதமாக்கினர். சிங்கள சமூகத்தில் சாதியம் கடந்த பௌத்தத்தை நோக்கிய நகர்வைத் தடுக்கும் வகையில், பௌத்த சமய மீளெழுச்சியை சிங்கள உயர்குடியினர் கையக்கப்படுத்தினர். அதிகாரத்தைத் தக்கவைக்கும் எதிர்ப்புகளை அடக்கும் வழிமுறையாக மதம் பயன்படுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.