;
Athirady Tamil News

தேன் போல் இனிக்கும் மட்டி வாழை: புவிசார் குறியீடு பெற்ற இதில் உள்ள சிறப்புகள் என்ன? (கட்டுரை)

0

சுண்டு விரல் அளவுள்ள மட்டி ரக வாழைப்பழம் தேன் போன்ற தித்திப்பு சுவையும் ஊர் முழுவதும் வாசம் வீசும் தன்மையும் உடையது.

தனிச் சிறப்புடைய கன்னியாகுமரி மட்டி வாழை பழத்திற்கு சமீபத்தில் புவி சார் குறியீடு கிடைத்துள்ளது.

மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்தது ஏன், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் மட்டி வாழை மட்டும் எப்படி இவ்வளவு ருசியாக உள்ளது என்பன குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

மட்டி ரக வாழையின் பிறப்பிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிதான். காணி பழங்குடியின மக்களால் சாகுபடி செய்யப்பட்டு வந்த மட்டி வாழை மரங்கள் காலப்போக்கில் சமவெளிப் பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம், என்கிறார் துவரங்காடு பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான 70 வயது நிரம்பிய சென்பகசேகரன் பிள்ளை.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “எனது சிறு வயதில் மலைப் பகுதிகளில் இருந்து மட்டி குலைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதைப் பார்த்துள்ளேன். கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள மட்டி குலைகள் பழுத்துவிட்டால் அந்த ஊர் முழுவதும் வாசம் வீசும்.

ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் மலைப் பகுதிகளில் வளர்க்கப்படும் மட்டி வாழை பழத்தின் ருசியும், மணமும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். 4 அல்லது 5 சீப்புகள் கொண்ட சிறிய தாராக மட்டி வாழைத்தார் இருக்கும்.

குமரி மாவட்டத்தில் ஆறு மாதமான குழந்தைகளுக்கு தாய் பாலுக்கு அடுத்தப்படியாக திட உணவு வழங்கத் தொடங்கும்போது மட்டி பழம் கொடுப்பது வழக்கம். எளிதில் ஜீரணமாகும், ஜலதோஷம் பிடிக்காது, எந்தவித வயிறு சம்பந்தமான உபாதைகளும் வராது என்பதால் தாய்ப் பாலை போல மட்டி பழமும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகிறது,” என்றார் அவர்.

முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்துள்ள கல்குளம், விளவங்கோடு, தோவாளை தாலுகாக்களில் மட்டி வாழை அதிகம் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மட்டி வாழை சாகுபடி நடக்கிறது.

கடந்த 1965இல் கேரளாவை சேர்ந்த ஆய்வாளர் ஜேக்கப் குரியன் (Jacob Kurien) திருவிதாங்கூர் பகுதியில் உள்ள 165 ரக வாழைப் பழங்களை ஆவணப்படுத்தி எழுதிய Madras Bananas-A Monograph என்ற புத்தகத்தில் அரிய வகையைச் சேர்ந்த மட்டி வாழைகள் நாகர்கோவில் அருகில் உள்ள ‘தென் திருவிதாங்கூர்’ மலைகளில் மட்டுமே விளைகிறது என்று குறிப்பிட்டுள்ளார். (மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பு கேரளாவோடு இருந்த கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகள் தென் திருவிதாங்கூர் என அழைக்கப்பட்டது)

இதன் மூலம் மட்டி வாழை ரகத்தின் பிறப்பிடம் கன்னியாகுமரி மாவட்டம்தான் என்பதை உறுதியாகக் கூறலாம் என்கிறார், நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ கல்லூரி தாவரவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் லோகிதாஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய முப்பதுக்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார் பேராசிரியர் லோகிதாஸ்.

மட்டி வாழை குறித்து அவர் மேலும் கூறுகையில், “அதிகம் மழைப் பொழிவு உள்ளதாலும், மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் உள்ள மண் வளத்தின் காரணமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மட்டி பழத்தின் சுவையும், வாசமும் தனித்துவமாக இருக்கும். ஆனால் இதே மட்டி வாழையை வேறு பகுதிகளில் பயிரிட்டால் இதே சுவையும் வாசனையும் கிடைப்பதில்லை.”

மட்டி வாழையில் ஆறு வகைகள் உள்ளதாகவும் அவர் விளக்குகிறார். அவை,

“மட்டி வாழையில் அஸ்கார்பிக் அமிலம் (Ascorbic acid) அதிக அளவில் உள்ளது. இது குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுவதோடு மனநிலையை மேம்படுத்தும் (Mood enhancer) ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன.

வாழைப் பழங்களில் அதிக சர்க்கரை அளவாக நேந்திரன் வாழை பழத்தில் 180 மில்லி கிராம் சர்க்கரை உள்ளது. ஆனால் செம்மட்டி வாழை பழத்தில் 18 மில்லி கிராம் அளவுதான் சர்க்கரை உள்ளது. எனவே மிகக் குறைந்த அளவு சர்க்கரை உள்ள செம்மட்டி பழத்தை நீரிழிவு நோயாளிகள்கூட சாப்பிடலாம்.

இதன் அளவு சிறியதாக இருப்பதால் மட்டி வாழைத் தாரின் எடை குறைவு. இதனால் மட்டி வாழை தார் விற்பனை மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும் வருவாயும் குறைவு. எனவே மட்டி வாழையை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை,” என்கிறார் பேராசிரியர் லோகிதாஸ்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 5000 ஹெக்டேர் பரப்பில்தான் வாழை சாகுபடி நடைபெறுகிறது. அதிலும் மட்டி வாழை சாகுபடி செய்யப்படும் பரப்பளவு மிகவும் குறைவுதான், என்கிறார் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜான்.

இது குறித்து அவர் பேசியபோது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் நேந்திரன் மற்றும் செவ்வாழை ரகங்களைத்தான் விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர். மட்டி வாழையை தனி பயிராக, அதாவது ஒரு தோட்டம் முழுவதும் மட்டி வாழை எனப் பயிரிடுவது கிடையாது.

ஒரு தோட்டத்தில் ஆயிரம் நேந்திரன் வாழைகள் பயிரிடும்போது, இடையே 100 அல்லது 150 மட்டி வாழைக் கன்றுகளையும், ரசகதலி ரக வாழைக் கன்றுகளையும் நட்டு வளர்கின்றனர்.

திடிரென விலை சரிவு ஏற்பட்டால் அதிக நஷ்டம் ஏற்படலாம் என்பதாலும், பழுத்தவுடன் சீக்கிரம் கெட்டு விடும் தன்மை இருப்பதாலும் மட்டி வாழையை விவசாயிகள் அதிகம் பயிரிடுவதில்லை,” என்று கூறுகிறார்.

தற்போதுள்ள மட்டிப் பழங்களில் முன்பு போல் மணமும் சுவையும் இல்லாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அதிகப்படியான ரசாயன உரங்கள் பயன்படுத்துவதுதான் என்று கூறுகிறார் ஷீலா ஜான்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யும் சிறிய விவசாயிகள்தான் அதிகம்.

“குத்தகைக்கு எடுத்துள்ள குறுகிய காலத்தில் அதிக லாபம் எடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் நிலத்தில் அதிகப்படியான ரசாயன உரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் மண் வளம் கெட்டு மட்டி வாழைப் பழத்தின் இயற்கையான மணமும் ருசியும் குறைந்துவிட்டது.

ஆனால், மாவட்டத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் ஒரு சில விவசாயிகள் பயிரிடும் மட்டி வாழையில் முன்பு இருந்தது போல் மணமும் ருசியும் இன்றும் உள்ளது,” என்று தெரிவித்தார் தோட்டக்கலைத்துறைத் துணை இயக்குநர் ஷீலா ஜான்.

நேந்திரன் வாழையோடு ஒப்பிடும்போது மட்டி வாழையில் நோய்த் தாக்குதல் ஏற்படுவது சற்று அதிகம்தான், என்கிறார் தக்கலை ஆழ்வார்கோயில் பகுதியில் வாழை பயிரிட்டுள்ள விவசாயி கிருஷ்ணகுமார்.

மட்டி வாழை சாகுபடி குறித்து அவர் மேலும் கூறுகையில், ஒரு மட்டி வாழைத் தார் சராசரியாக 12 கிலோவும், அதிகபட்சமாக 16 முதல் 17 கிலோ வரையும் எடை இருக்கும். ஒரு வாழைத் தாரில் 8 முதல் 16 சீப்பு வரை மட்டிப் பழம் இருக்கும். மட்டி வாழை கன்று வளர்ந்து அறுவடைக்கு வர 11 முதல் 12 மாதங்கள் வரை ஆகலாம்.

குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் மட்டி வாழைப் பழத்தைப் பொருத்தவரை ஆண்டு முழுவதும் இதற்கு சந்தை வாய்ப்பு உள்ளது. நேந்திரன் மற்றும் செவ்வாழை தார்களை வாங்க வியாபாரிகள் தோட்டத்திற்கே வருவார்கள். ஆனால் மட்டி வாழையைப் பொருத்தவரை சந்தைக்குக் கொண்டு சென்றுதான் விற்க வேண்டும். அதேபோல் கேரள சந்தைகளுக்கு மட்டி வாழை தார்கள் செல்வதும் குறைவு.

நான் இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்வதால் ஒரு சிலர் தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். சென்னை, பெங்களூரு பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இங்கிருந்து மட்டி வாழை தார்களை சிலர் வாங்கி அனுப்பவும் செய்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார், தக்கலை, ராஜாக்கமங்கலம் பகுதிகளில் மட்டி வாழை அதிகம் பயிரிடப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் பயிரிடப்படும் வாழைப் பழத்தின் சுவையும் அதிகமாக இருக்கும்.

சாதாரண மட்டி சுமார் 240 கன்றுகளும் சில செம்மட்டி கன்றுகளும் எனது தோட்டத்தில் உள்ளன. செம்மட்டி உள்ளிட்ட மட்டி வாழை ரகங்களை விற்பனைக்காக விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயிரிடுவது இல்லை. வீட்டுத் தேவைகளுக்கு ஒன்றிரண்டு கன்றுகள்தான் வளர்க்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் மட்டி வாழை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும். இதன்மூலம் விற்பனை அதிகரித்தால் விவசாயிகளும் இன்னும் கூடுதலாகப் பயிரிடத் தொடங்குவார்கள்,” என்றார் கிருஷ்ணகுமார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தற்போது நாகர்கோவில் ஆப்டா (APPTA) சந்தைக்கு விற்பனைக்கு வரும் மட்டி வாழை தார்களின் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களில் இருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மட்டி வாழை தார்கள் விற்பனைக்கு வருகின்றன, என்கிறார் ஆப்டா சந்தையில் வாழைத் தார் மொத்த விற்பனை கடை வைத்துள்ள சுரேஷ்.

வழக்கமாக பங்குனி, சித்திரை மாதங்களில் மட்டி வாழைத் தாரின் வரத்து அதிகமாக இருக்கும். சுமார் 500 முதல் 600 வாழைத் தார்கள் வரை தினமும் சந்தைக்கு விற்பனைக்கு வரும். அப்போது மட்டி வாழைப் பழங்கள் கிலோ 30 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகும்.

ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வரத்து குறைவாக நாள் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 100 மட்டி வாழைத் தார்கள் வரை சந்தைக்கு விற்பனைக்கு வரும். இந்தக் காலகட்டத்தில் மட்டி வாழை கிலோ 130 ரூபாய் வரை விற்பனையாகும்.

கன்னியாகுமரி மட்டி வாழை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்த பிறகு, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. விற்பனையும் சற்று அதிகரித்துள்ளது,” என்றார்.

கன்னியாகுமரி மாவட்ட சந்தைகளில் இருந்து ஆண்டுக்கு சுமார் 1800 முதல் 2100 மெட்ரிக் டன் வரை மட்டி வாழைப் பழங்கள் விற்பனையாவதாக, வேளாண் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது தோராயமான கணக்குதான் என்றும், புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் இனிதான் சரியான தரவுகள் சேகரிக்கப்பட உள்ளதாகவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.